பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மாயாவிநோதப் பரதேசி

திரிபுரசுந்தரியம்மாள், “நான் அந்தச் சந்தேகம் கொள்ளவில்லை. எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் செய்யும் மரியாதையை ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே முறை. அதைப்பற்றி நான் நினைக்கவில்லை. நாம் அதிகமான பொருள்களை வைத்தால், அவர்கள் நம்மைவிட உயர்வானவர்கள் என்றும், நாம் அபாரமான பணத்தைக் கொடுத்து அவர்களுடைய சம்பந்தத்தைப் பெறுகிறோம் என்றும் ஜனங்கள் நினைப்பார்கள். அதுவும் அன்றி, சம்பந்தி வீட்டாரும் தங்களை உயர்வாக நாம் மதிப்பதாக நினைத்துச் செருக்கடைவார்களோ என்னவோ” என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, “சேச்சே! நம்முடைய சம்பந்தி பட்டாபி ராம பிள்ளை அப்பேர்ப்பட்ட மனிதரே அல்லர். அவர் இந்த ஊரில் அடிஷனல் மாஜிஸ்டிரேட்டாக இருந்த காலத்தில் நம்மிடத்தில் எவ்வளவு அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொண்டாரோ, அப்படியே தான் இப்பவும் இருக்கிறார் என்பது அவர் சமீப காலத்தில் இங்கே வந்திருந்த போது தெரிய வில்லையா. அவர் நமக்கு எழுதியுள்ள எத்தனையோ கடிதங்களில், நம்முடைய சம்பந்தம் உயர்வானதென்றும், அது தமக்குக் கிடைக்குமானால், தாம் பாக்கியவான் என்றும் பல தடவைகளில் அவர் எழுதி இருக்கிறாரே. அப்படி இருக்க, அவர் இப்போது அதற்கு விரோதமாக நினைத்துக் கொள்வாரா? ஒரு நாளும் அப்படிச் செய்யமாட்டார். தவறி நினைத்துக் கொண்டாலும், அதனால் நமக்கு இழிவு ஏற்படப் போகிற தில்லை. எந்தெந்த சந்தர்ப்பங்களில் நாம் எதிராளிக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டுமோ அதைப் பூர்த்தியாகச் செய்தே தீர வேண்டும். அது அவர்களை நாம் கெளரவப்படுத்துகிறது போலவும் இருக்கும்; நம்முடைய பெருந்தன்மையைக் காட்டியது போலவும் இருக்கும். எதிலும் நாம் லோபம் செய்யக் கூடாது. நமக்கு ஈசுவரன் ஒரு குறைவையும் வைக்கவில்லை. என்னுடைய ஏராளமான சொத்து போதாதென்று கந்தசாமி சுவீகாரம் போன வகையில், வருஷத்தில் லட்சம் ரூபாய் வருமானம் வரக்கூடிய எதேஷ்டமான செல்வமும் வந்து