பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

83

சேர்ந்திருக்கிறது. நம்முடைய பெரியவர் நடராஜ பிள்ளையின் செல்வமெல்லாம் வந்து சேர்ந்திருக்கிறது. இவ்வளவையும் சேர்த்தால், ஒரு மகாராஜனுடைய அபார சம்பத்துக்குச் சமமாகச் சொல்லலாம். ஈசுவரன் நமக்கு அவ்வளவு தூரம் கொடுத்திருக்கி றார்கள். அதில் கந்தசாமியின் சுவீகாரத்தில் வந்தது முக்கால் பங்குக்கு மேல் இருக்கும். அப்படி இருக்க, அவனுடைய கலியாணத்தை நாம் ஒரு மகாராஜனுடைய கலியாணத்தைப் போல நடத்த வேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்தப் பணச் செல்வத்தை எல்லாம் நான் பெரிதாக மதிக்கவே இல்லை. நற்குணங்களும், நல்லொழுக்கமும் நிறைந்த இரண்டு விலையில்லா மாணிக்கங்களைக் கடவுள் நமக்கு இரண்டு குழந்தைகளாகக் கொடுத்திருக்கிறார். அவர்களுடைய குணாதிசயங்களைப்பற்றி சிந்திக்கும் போது ராமன், பரதன் ஆகிய இருவரையுமே இவர்களுக்கு உவமை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் என் மனசில் தானாகவே உண்டாகிறது. எல்லோருக்கும் சிரோரத்னமாக நம்முடைய குழந்தை வடிவாம்பாள் அமைத் திருக்கிறாள். இந்த மூன்று குழந்தைகளையுந்தான். நான் என்னுடைய உண்மையான செல்வமாக மதித்து வருகிறேன். ஆகையால் நமக்குள்ள பணச்செல்வத்தை எல்லாம் இவர்களுக்கு ஏற்படும் சுப காலங்களில் சிறப்பாகச் செலவு செய்வதே என் ஆத்மாவுக்கு அளவற்ற ஆனந்தத்தை உண்டுபண்ணுகிறது. தெய்வத்தின் அருளால் இப்போது வரப்போகும் மனோன்மணி அம்மாளும் நம்முடைய வடிவாம்பாளைப் போலவே இருந்து விடுவாளானால் இந்த உலகத்தில் நான் அனுபவிக்கக் கூடிய ஆனந்தமும் செல்வமும்' பரிபூர்ணம் ஆகிவிடும். ஆயிரம் வருஷம் நான் உயிரோடிருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், என் மனம் தெவிட்டாது. இந்த உலகை விட்டுப் போகவும் மனம் வராது. அப்படிப்பட்ட கண்மணி 'களுடைய கல்யாணத்தில், நாம் எதைப்பற்றியும் சிந்தனை செய்யாமல், பொருளை ஏராளமாகச் செலவு செய்வது அத்யாவசியம்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள் அளவற்ற குதூகலமும் ஆனந்தமும் அடைந்து புன்னகை பூத்த முகத்தினளாய், "அப்படியானால்,