பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

71

வெளியில் போகும் வண்டிகளையும் மனிதரையும் கவனித்துப் பார்த்தபடி இருக்கிறார்கள். ரயிலடி.யிலும் ஜெவான்கள் நின்று உள்ளே போகும் மனிதர்களைக் கவனித்துப் பார்த்தே விடுகிறார்கள். தஞ்சையில் உள்ள சந்து பொந்துகளில் எல்லாம் ஜெவான்கள் காவலாக நின்று கொண்டிருக்கிறார்கள். தவிர, உடனே கும்பகோணத்துக்கும் தந்தி போயிருக்கிறது. அந்த ஊருக்குள் வரும் சகலமான பாதைகளிலும் ரயிலடியிலும் ஜெவான்கள் எச்சரிப்பாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். சட்டைநாத பிள்ளையின் வீடுகளுக்கு எதிரில் எல்லாம் ஜெவான்கள் நின்று, அவர் எங்கே வந்தாலும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். கைதியும், அவரை விடுவித்தவர்களும் இன்ன இடத்திற்குப் போனார்கள் என்பது தெரியவில்லை. கைதியின் தம்பி மாசிலாமணி என்பவர் தமது ஜாகையில் ஒன்றையும் அறியாதவர் போல இருந்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்டே இந்தக் காரியம் நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் யூகிப்பது சகஜமானாலும், அவரைச் சம்பந்தப்படுத்துவதற்கு எவ்வித சாட்சியும் எதுவுமில்லை. ஆகையால், போலீசார் அவரைப் பிடிக்கப் பின் வாங்குகிறார். தமது தமையனார் சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டார் என்ற செய்தியையும், அவரைப் பிடித்துக் கொடுப்பதற்கு 5000 ரூபாய் வெகுமதி கொடுப்பதாக போலீசார் விளம்பரப்படுத்தி இருப்பதையும் கேள்வியுற்ற மாசிலாமணி அதைப்பற்றித் தாமும் ஆச்சரியம் அடைவதாகவும், தமது தமையனார் செய்த காரியம் தம் மனதிற்கும் பிடிக்கவில்லை என்றும், அவரைப் பிடித்து சர்க்காரிடம் ஒப்புவிப்போருக்குத் தாமும் இன்னொரு பதினாயிரம் ரூபாய் வெகுமதி கொடுப்பதாகப் பத்திரிகைகளுக்கு எழுதப் போவதாகவும் சொன்னாராம். இவ்வளவே இப்போது கிடைத்த விவரம்; மேல் விவரம் கிடைக்கக் கிடைக்க வெளியிடுகிறோம்

என்று இவ்வண்ணம் எழுதப்பட்டிருந்ததை கண்ணப்பா படிக்க, எல்லோரும் முற்றிலும் பிரமிப்படைந்து, அப்படியே ஒடுங்கி ஓய்ந்து போயினர்.