பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

73

இருந்தன. கடைசியாக மன்னார்குடி முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட்டு அவரையும் மற்றவர்களையும் தண்டித்து சிறைச்சாலைக்கு அனுப்பிய பின், அவர் ஒரு பிரபல வக்கீலை நியமித்து தமக்காகவும் மற்றவருக்காகவும் மேல் நியாயஸ்தலங்களில் அப்பீல் செய்தார். அவ்விடங்களிலும் அவருக்குப் பிரதிகூலமே ஏற்பட்டது. அவர் உடனே நீதிபதிக்கு ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். தமது ஜாகையில் உள்ள சகலமான சொத்துக் களையும் அப்படியே வைத்து வெளிக்கதவைப் பூட்டி முத்திரை போட்டு வாசலில் ஒரு ஜெவானைக் காவல் போட்டு வைக்க வேண்டும் என்றும், அந்த ஜெவானுக்குரிய சம்பளம் முதலிய செலவுகளைத் தாமே கொடுப்பதாகவும், தமது தம்பியான மாசிலா மணி அவனுக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு வருஷ தண்டனைக்காலம் முடிந்த பின் சிறைச்சாலையில் இருந்து வெளிப்பட்டு வந்தவுடன் அந்தச் சொத்துக்களை எல்லாம் அவனிடம் ஒப்புவித்துவிட வேண்டும் என்றும், அந்த விண்ணப்பத்தில் கண்டிருந்தார். அதுவும் அன்றி, மாசிலாமணி வெளியில் வந்த காலத்தில், தமது நிலங்களில் இருந்து வர வேண்டிய நெல் முதலிய தானியங்களையும், கடன் காரர்களிடத்தில் இருந்து வரவேண்டிய வட்டித் தொகை களையும், வீட்டு வாடகைகளையும் மாசிலாமணியே வசூலித்துத் தனது பிரியப்.டி. ஆண்டு அனுபவித்துக் கொள்ளலாம் என்று ஓர் அதிகாரப் பத்திரம் எழுதி, சப் ரிஜிஸ்டிராருக்கு அதிகமான கட்டணம் கட்டி, அவரைச் சிறைச்சாலைக்கே வரவழைத்து, அந்த தஸ்தாவேஜை ரிஜிஸ்டர் செய்து அதை மாசிலாமணியிடம் கொடுத்தனுப்பி வைத்தார்.

ஆகவே, மாசிலாமணி சிறைச்சாலையை விட்டுத் திரும்பித் தனது சொந்த ஊராகிய கும்பகோணத்திற்கு வந்தவுடனே, அந்த ஊர்ப் பெரிய தெருவிலிருந்த அவனது பெருத்த மாளிகையும் அதற்குள் இருந்த சகலமான பொருட்களும் அப்படியே அவனிடம் ஒப்புவிக்கப்பட்டன. ஒரு வருஷ காலமாக வசூலிக்கப் படாமல் பாக்கி நின்ற குத்தகைத் தானியங்கள், வட்டிப் பணம், வாடகைப் பணம் முதலிய யாவும் ஒரே மொத்தமாக அவனிடம் வந்து சேர்ந்தன. அவன் சகலமான செல்வங்களுக்கும் அதிபதி