பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

75

அவனது மனதில் தோன்றித் தோன்றி நொடிக்கு நொடி உறுதிப்பட்டு பலத்து வந்தது. அவன் ஒரு மாதகாலம் வரையில் இரவு பகல் ஆழ்ந்து யோசனை செய்து செய்து தான் இன்னவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டான். திகம்பரசாமியார் நிரம்பவும் தந்திரம் வாய்ந்த சௌரியவான் ஆதலால், அவரிடம் தான் முன் போல அலட்சியமாக நடந்து கொள்ளாமல், அவரைவிட அதிகத் தந்திர மாகவும் கபடமாகவும் ரகசியமாகவும் சகலமான விஷயங் களையும் நிறைவேற்ற வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். திகம்பரசாமியாரானாலும், அல்லது, அவரைவிடப் பதினாயிரம் மடங்கு சிரேஷ்டமான யூகமும் சாமர்த்தியமும் வாய்ந்த அதிமேதாவியானாலும் எவ்வளவு முயன்றாலும், தனது ரகசியம் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்க வேண்டும் என்ற அபாரமான கருத்தோடும் ஆழ்ந்த யோசனையோடும் அவன் தனது ஏற்பாடுகளை அதியந்தரங்கமாகச் செய்து வந்தான். ஒரு மனிதன் தண்டனை அடைந்து சிறைச்சாலையில் இருந்து விடுபட்டு வந்தால், அவனைப் பற்றிய விவரம் முழுதும் உடனே போலீசாருக்கு வந்துவிடும். ஆதலால், அவர்கள் அவனை அடிக்கடி பார்த்தும், அவனது நடவடிக்கைகளைக் கவனித்தும் வருவது வழக்கம். அதுபோல, கும்பகோணம் போலீசார், பெரிய மனிதனாகிய மாசிலாமணியிடம் அடிக்கடி பணம் கறப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததென்று நினைத்து ஒவ்வொரு நாளும் அவனது வீட்டிற்கு வந்து அவனை ஆஜர் பார்த்துவிட்டுத் தமது வாய்மூட்டுகளைப் பெற்றுக்கொண்டு போயினர். அவர்கள் அவ்வாறு அடிக்கடி வந்து பார்த்து, தான் நல்ல நடத்தையோடு இருப்பதாக எழுதிக்கொண்டு போனதை அவன் ஒரு நன்மையாக மதித்து, பிறர் சந்தேகிக்காதபடி உள்ளுற பற்பல ஆழ்ந்த சதி ஆலோசனைகளையும் முஸ்தீபுகளையும் செய்து வந்தான். தனக்கு உதவிக்குத் தேவையான சாமர்த்தியசாலியான பல மனிதர்களின் சிநேகத்தையும் அவன் சம்பாதித்துக் கொண்டான். அவன் வசித்து வந்த மூன்று கட்டுகள் உடைய பெருத்த மாளிகையின் மேல் பாகத்தில் அழகான இரண்டு உப்பரிகைகள் அமைத்ததன்றி அதில் வேறு பல மாறுதல்களையும்