பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

77

இரண்டு ஜெவான்களை நிறுத்திவிட்டு, இரட்டைக்குழாய்த் துப்பாக்கி பிடித்த நான்கு ஜெவான்களைத் தம்மோடு கூட அழைத்துக் கொண்டு தடதடவென்று உள்ளே நுழைந்தார். நுழைந்தவர் கூடத்தை அடைந்து, அவ்விடத்தில் வேலைக்காரன் கூறியது போல மாசிலாமணி வெற்றிலை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்ததைக் கண்டு அவனிடம் நெருங்கினார். நெருங்கிய போது, அவர் பின்னால் திரும்பி, "அடேய்! இரண்டு பேர் பின் பக்கம் போய், வாசற்படியண்டை ஜாக்கிரதையாக நில்லுங்கள். நான் மறுபடி கூப்பிடும் போது வரலாம். இரண்டு பேர் என்னோடு கூடவே இருங்கள்" என்று கூறிய வண்ணம் மாசிலாமணியிடம் நெருங்கினார். அவரது உத்தரவின்படி இரண்டு ஜெவான்கள் உடனே விரைவாக நடந்து மூன்றாவது கட்டின் கடைசி வாசலுக்குப் போய் அவ்விடத்தில் பாராக்கொடுத்து நின்றனர்.

இன்ஸ்பெக்டரும் ஜெவான்களும் திடீரென்று தமக்கருகில் வந்ததைக் கண்டு திடுக்கிட்டுக் குழப்பமடைந்தவன் போலத் தோன்றிய மாசிலாமணி உடனே ஒருவாறு சமாளித்துக் கொண்டு தனது முகத்தில் புன்னகையை உண்டாக்கிக் கொண்டு சரேலென்று எழுந்து வணக்கமாகக் கைகுவித்து நின்று நிரம்பவும் மரியாதையாகப் பேசத் தொடங்கி, "சுவாமிகளே! நமஸ்காரம், வரவேண்டும்; வரவேண்டும். இந்த சோபாவின் மேல் தயவு செய்யுங்கள்" என்று அன்பாகக் கூறி இன்ஸ்பெக்டரை உபசரித்து வரவேற்க, அவர் மாசிலாமணியின் உபசரணைகளைச் சிறிதும் பொருட்படுத்தாதவராய், "என்ன மாசிலாமணிப் பிள்ளை! என்ன விசேஷம்? எல்லாம் சௌக்கியந்தானே?" என்று கேட்டு அவனது முகமாறுதலை உற்றுக்கவனித்த வண்ணம் அவனுக்கு முன்னால் கிடந்த ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டார். துப்பாக்கி களோடு வந்த மிகுதியான இரண்டு ஜெவான்களும் மாசிலாமணியின் பின்னால் இரண்டு பக்கங்களிலும் போய் வளைத்துக் கொண்டனர். அதற்கு முன் ஒவ்வொரு நாளும் வந்து தனது தோழர்கள் போலத் தன்னோடு நெடுநேரம் இருந்து வேடிக்கையாகப் பேசிவிட்டுப் போய்க் கொண்டிருந்த ஜெவான்கள் அப்போது இன்ஸ்பெக்டருக்கெதிரில், முற்றிலும் முகமறியாத அன்னியரைப் போல நடந்து, சமயம் வாய்த்தால்,