பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

105


மாசிலாமணி:- ஆம், சேர்வைகாரரே! நீர் சொல்வதும் சரியான ஆட்சேபனை தான். அதற்கு நாம் வேறொரு தந்திரம் செய்யலாம் என்று நினைக்கிறேன். நீரும் உம்முடைய ஆள்களும் போகும் போது தலைக்கு அரைப்படி மிளகாய்ப் பொடியை மடியில் கட்டிக் கொண்டு போங்கள். தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும் ஜனங்களுடைய முகத்தில், நீங்கள் மிளகாய்ப் பொடியை எடுத்தெடுத்து வீசினால், அந்த எரிச்சலைப் பொறுக்க மாட்டாமல் எல்லோரும் தம்முடைய கண்களை மூடிக்கொண்டு கதறி, கண்களை அலம்பிக் கொள்வதற்குத் தண்ணி இருக்கும் இடத்தைத் தேடிப் போவார்களே அன்றி உங்களைக் கவனிக்க மாட்டார்கள். அந்தச் சமயத்தில் நம்முடைய எதிரிகளை அங்க ஹீனப்படுத்திவிட்டு ஓடிவந்து விடுங்கள். இந்த மாதிரி செய்யலாம் அல்லவா? இதிலும் ஏதாவது ஆட்சேபனை உண்டோ?

இ. சேர்வைகாரன்:- அந்த மாதிரி செய்யலாம். ஆனாலும் அது எனக்கு அவ்வளவு உசிதமான யோசனையாகப் படவில்லை. ஜனங்கள் சுமார் பத்துப்பேருக்குள் இருந்தால், அந்தத் தந்திரத்தைச் சுலபமாகச் செய்து காரியத்தை முடிக்கலாம். சுமார் ஐம்பது ஜனங்கள் மூலைக்கொருவராய்ப் படுத்திருக்கையில், பத்து மனிதர்களாகிய நாங்கள் அத்தனை பேருடைய முகத்திலும் மிளகாய்ப் பொடியைத் தூவுவது சாத்தியமானதல்ல. நாங்கள் இருவது முப்பது பேருக்குத் தூவுவதற்குள், மற்றவர் எங்களுக்குப் பின்புறமாக வந்து வளைத்துக் கொள்ளுவார்கள், அல்லது, வெளியில் ஓடிப்போய்க் கூச்சலிட்டு ஏராளமான ஜனங்களைத் திரட்டிக் கொண்டு வருவார்கள். ஆகையால் இந்த யோசனை இருக்கட்டும். எனக்கு இன்னொரு நல்ல யோசனை தோன்றுகிறது. அப்படிச் செய்யலாம். ஆனால் அதை நம்முடைய ரமாமணிதான் துணிந்து செய்ய வேண்டும். அபினி என்று ஒரு லாகிரி வஸ்து இருக்கிறதென்று நீங்கள் கேள்வியுற்று இருக்கலாம். அந்த வஸ்துவில் ஒரு மிளகுப் பிரமாணம் ஒருவன் சாப்பிட்டால், அவன் பல நாட்கள் வரையில் மயங்கிக் கிடப்பான். அந்த அபினியைக் கொண்டு போய் ஜெர்மன் தேசத்தார் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அதோடு இன்னம் பல சாமான்களைச்