பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

109


வரும் தினத்திலேயே இந்தப் போலி மனோன்மணியை நாம் முன் சொன்னது போல வெளியேற்றி விடலாம். உம்முடைய ஆள்கள் எல்லோரும் தக்க பெரிய மனிதர்கள் போல வேஷ்டி சட்டைகளைப் போட்டுக் கொண்டு வியாழக்கிழமை சாயுங்கால வண்டியில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை தினம் காலையில் பட்டணம் வந்து ராமசாமி முதலியார் சத்திரத்தில் உங்களைச் சந்திக்கட்டும். உங்களுடைய ஆள்கள் இரண்டு தினங்கள் முன்னாகவே அங்கே வந்து கும்பலாகக் கூடியிருந்தால், போலீசார் சந்தேகங்கொண்டு பிடித்துக் கொண்டாலும் கொள்வார்கள். ஆகையால் அவர்கள் வெள்ளிக் கிழமை அன்று அங்கே வருவதே போதுமானது. சனிக்கிழமையே அவர்கள் புறப்பட்டு இங்கே வந்துவிடட்டும். அவர்கள் பிரயாணம் போகும் போதும், திரும்பி வரும் போதும், ஒருவருக் கொருவர் சம்பந்தமில்லாத வெவ்வேறு மனிதர் போல நடக்க வேண்டுமே அன்றி கும்பலாய்ப் போகக்கூடாது. அதை அவர்களுக்குச் சொல்லிவையும்; இன்னும் கொஞ்ச நேரத்தில் போலீஸ் நாய்கள் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போன உடனே நான் போய் ரமாமணியோடு பேசி, இன்றைய தினம் சாயுங்கால வண்டிக்குப் புறப்பட ஆயத்தமாக இருக்கும்படி செய்து விட்டு வருகிறேன். நீர் சாயுங்காலம் குதிரை வண்டியோடு வந்து சேரும். ஒருவேளை ரமாமணி தன்னோடு துணைக்குத் தன் மனிதர் யாரையாவது அழைத்துக் கொண்டு வந்தாலும் வருவாள். அவளுடைய பிரியப்படியே நடந்து கொள்ளும்.

இ. சேர்வைகாரன்:- சரி; அப்படியே செய்து விடுவோம். நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். நாங்கள் பட்டணம் போய்த் திரும்பி வருவதற்குள் தாங்கள் இந்தப் போலி மனோன்மணி யோடு பழகி, இவளுடைய உண்மையான வரலாற்றையும், என்ன கருத்தோடு இவர்கள் வேலாயுதம் பிள்ளையின் சொந்தக் காரர்கள் என்று பொய்யான தகவல்களைச் சொல்லிக் கொண்டு பட்டாபிராம பிள்ளையின் பங்களாவிற்குப் போனார்கள் என்ற விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதனால், நமக்கு ஏதாவது அனுகூலம் ஏற்படலாம்.