பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

111


அவனை நோக்கி, "அம்மாளுடைய சமயம் எப்படி?" என்றான். போயி சிறிது தயங்கி, "போஜன சமயமோ என்னவோ தெரிய வில்லை எஜமானே!" என்றான். அதைக் கேட்டுக் கொண்ட மாசிலாமணி முதல் வாசலைக் கடந்து உள்ளே சென்றான். அதன் நடைக்கதவு சாத்தி உள்பக்கத்தில் தாளிடப் பெற்றிருந்தது. அதன் பக்கத்தில் போய் நின்ற மாசிலாமணி "ரமா! ரமா!" என்று கொஞ்ச லாக இரண்டு குரல் கூப்பிட்ட வண்ணம் கதவை மெதுவாகத் தட்ட, உடனே கதவு திறக்கப்பட்டது. உட்புறத்தில் சுமார் நாற்பத்தைந்து வயதடைந்த ஒரு மனிதர் நின்று கொண்டார். அவர் மாசிலாமணியைக் கண்டு சிரித்த முகத்தோடு, "வாருங்கள், குழந்தை படுக்கை அறையில் நாவல் படித்துக் கொண்டு படுத்திருக்கிறாள்" என்று கூறிவிட்டு, மேல் பக்கம் நிமிர்ந்து மெத்தையைப் பார்த்தபடி, "ரமா ரமா! எஜமான் வந்திருக்கிறார்கள்" என்று கூவி எச்சரித்தான்.

அடுத்த நிமிஷத்தில், மாசிலாமணி தாழ்வாரத்தில் இருந்த படிக்கட்டின் வழியாக ஏறி மேன்மாடத்திற்குச் செல்லலானான். படிகள் முடிந்தவுடன் எதிரில் ஒரு பெருத்த கூடம் காணப்பட்டது. அந்தக் கூடம் தேவேந்திரனது கொலு மண்டபம் போல மகா அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு, காண்டோர் மனதை பிரமிக்கச் செய்வதாய் அமைந்திருந்தது. எங்கு பார்த்தாலும் நிலைக் கண்ணாடிகளும், படங்களும், வால்ஷேட், குலோப்புகளும், கண்ணாடி ஸரங்களாலான இதர விளக்குகளும், மின்சார விளக்குகளும், ரஸகுண்டுகளும், புதுமை புதுமையான மின்சார விசிறியும், தந்த நாற்காலிகளும், வெல்வெட்டு சோபாக்களுமே மயமாக நிறைந்திருந்தன. ஆங்காங்கு, சிற்பசாஸ்திரிகளால் செதுக்கப்பட்ட விநோதமான பெண் சிலைகள் வேடிக்கையாக நிறுத்தப் பெற்றிருந்தன. நவரத்னங்களும் பட்டுகளும் கலந்த விலை உயர்ந்த ஹாரங்களும் தோரணங்களும் அந்தக் கூடம் முழுதிலும் பின்னிக் கொண்டு கொடிசம்பங்கிப் பந்தல் போலக் காணப்பட்டன. தரையே தெரியாதபடி வழுவழுப்பான இரத்தின கம்பளம் கீழே பரப்பப் பெற்றிருந்தது. அந்தக் கூடத்திற்கு அடுத்தாற்போல ரமாமணியின் பள்ளியறை இருந்தது.