பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

113


உள்ள விசையை அழுத்தினால், அவை கதவுகள் போலத் திறந்து கொண்டன. ஒவ்வொரு நிலைக் கண்ணாடியின் பின்புறத்திலும் ஒவ்வொரு கண்ணாடி பீரோ வைக்கப் பட்டிருந்தது. ஒரு பீரோவில், ரமாமணியம்மாளின் வைரம், கெம்பு, தங்கம் முதலிய ஆபரணங்களும், பவுன்களும், ரூபாய்களும் இருந்தன. இன்னொன்றில் அவளது பட்டாடைகள் ரவிக்கைகள் முதலிய ஆடைகளே மயமாக நிறைந்திருந்தன. இன்னொரு பீரோவில் மல்கோவா, சீமை இலந்தை, ஆரஞ்சு, செவ்வாழை, மலைவாழை முதலிய முதல் தரமான கனி வர்க்கங்கள் நிறைந்திருந்தன. இன்னொன்றில் நிறைய நாவல் புஸ்தகங்களும் பாட்டுப் புஸ்தகங்களும் அடங்கி இருந்தன. இன்னொன்றில், வீணை, பிடில், ஹார்மோனியம் முதலிய வாத்தியங்கள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொன்றில் ஜிலேபி, ஹல்வா, துத்பேடா, பூவுந்தி, பாஸுந்தி முதலிய மாதுரியமான மிட்டாய் தினுசுகள் வெள்ளிப் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பீரோவில் இளநீர், ஷர்பத், சோடா, கலர்கள், பால் முதலிய பான வஸ்துக்களே காணப்பட்டன.

இவ்வாறு அந்த அதிசயப் பள்ளியறை உலகத்தில் உள்ள இன்பகரமான வஸ்துக்கள் எல்லாம் நிறைந்த ஒரு பண்டக சாலை போல அமைந்திருந்தது அன்றி, அவைகள் யாவினும் பதினாயிரம் மடங்கு அதிக இன்பமயமாக விளங்கிய ரமாமணியம்மாள் என்ற பெண்ணரசியின் ஆஸ்தான மண்டபமாகும் பாக்கியத்தையும் பெற்றிருந்தது. அத்தகைய மேன்மை வாய்ந்த சயன மாளிகையின் கதவுகள் திறக்கப்பட்ட உடனே, உள்புறத்தில் சுவர்ண பிம்பம் போல அழகின் திரளமாகக் காணப்பட்ட ஒரு பெண் வடிவம் ஜெகஜ் ஜோதியாக எதிரில் நின்றது. அவளது அழகு அத்யாச்சரியமான தெய்வீகத் தன்மை வாய்ந்ததாய்த் தோன்றியது ஆகையால், அவள் அப்போதே தெய்வ லோகத்தில் இருந்து இந்திர விமானத்தில் அமர்ந்து கீழே இறங்கியவள் போலக் காணப்பட்டாள். அவளுக்குச் சுமார் பதினெட்டு, அல்லது, பத்தொன்பது வயதே இருக்கலாம்.
மா.வி.ப.II-8