பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

மாயா விநோதப் பரதேதி


ஜாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிய நமது வாசகர்கள் விரும்பலாம். அவரது ஜாதி இன்னதென்பதை நாம் வெளியிடுவோமாயின், அதே ஜாதியைச் சேர்ந்த பிறரது மனம் புண்படுவதைக் கருதி, நாம் வெளியிடுவது அநுசிதம் என, அதைச் சொல்லாமல் விடுகிறோம். அவரது முதல் மனைவி இறந்து போனபிறகு சில வருஷகாலம் அவர் விதுரராகவே இருந்து, தற்செயலாக ஒரு நாள் ஒரு வழக்கின் பொருட்டு பக்கத்து ஊரிற்குப் போயிருந்த காலத்தில், அவ்விடத்தில் அவர் தமது பந்துவான ஒருவர் வீட்டில் தங்க, அங்கே அவரது திருஷ்டியில் பட்ட அந்த பந்துவின் மகளான நமது ரமாமணியைக் கண்டு, அவளது மகா வசீகரமான அழகில் ஈடுபட்டு அவளை இரண்டாவது மனைவியாகக் கலியாணம் செய்து கொண்டார். ரமாமணியின் தாய் தந்தையர் பரம ஏழையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால், வக்கிலின் பெருத்த செல்வத்தையே கருதினார்கள் அன்றி, அவரது வயதையாகிலும் குடியினால் அவருக்கு ஏற்பட்டிருந்த இழிவையாகிலும் கருதவே இல்லை. நமது ரமாமணி தனது புருஷரது மனைக்கு வந்த பிறகு அபாரமான சம்பத்திற்கு எஜமானியாகி சகலமான சுகபோகங்களையும் செல்வாக்கையும் அனுபவித்து இருக்க, சொற்ப காலத்தில், அவளது தேகக்கட்டும் அழகும் பதினாயிரம் மடங்கு பெருகி அவளைக் காண்போரைப் பித்தராக்கத் தக்கவையாய் மாறிப் போயின. ஆபரணங்கள், ஆடைகள் முதலிய மற்ற எல்லா அம்சங்களிலும் அவளது மனம் திருப்தி அடைந்ததானாலும், புருஷன் சம்பந்தப்பட்ட வரையில், அவளது மனம் குறைப்பட்டுக் கொண்டே வந்தது. முன்னே கூறப்பட்டபடி வக்கீல் வீட்டில் இருந்த காலத்தில் எல்லாம் சீமை மதுவிற்கே அடிமையாய் மயங்கிக் கிடந்தார் ஆதலால், அவர் அவளை ஏறிட்டும் பார்க்காமல் அலட்சியமாக விட்டு வைத்திருந்தார். ரமாமணியம்மாளினது மனம் அதே ஏக்கத்தினால் வருந்தி வாடி மெலிந்து தத்தளித்து இருந்தது. வக்கீல் பகல் வேளைகளில் கச்சேரிக்குப் போயிருக்கும் காலத்தில், அவள் தனது வீட்டு மெத்தையின் மேல் நின்று வெளியில் பார்த்தபடி இருப்பது வழக்கம். ஆதலால், எதிரில் இருந்த நமது சட்டைநாத பிள்ளையின் மாளிகை எப்போதும்