பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

117


அவளது திருஷ்டிக்கு எதிரில் நின்று கொண்டே இருந்தது. தெய்வ லோகத்து அரம்பை போல மேன்மாடத்தில் நின்ற ஏந்தெழில் அணங்கை ஒரு நாள் நமது மாசிலாமணி தற்செயலாகக் கண்டு விட்டான். கண்டது முதல் அவனது மனதில் அவள்மீது கடுமையல் தோன்றிவிட்டது. மேன் மேலும் அவளைப் பார்த்து அவளது அற்புதமான அழகைக் கண்டு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அவன் தனது மாளிகையின் உப்பரிகையில் இருந்தபடி இமை கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருப்பான். இவ்வாறு அவன் அவளைக் கண்டது, அவன் சிறைச்சாலையில் இருந்து விடுபட்டு வந்த சில தினங்களுக்குப் பிறகே. அவளும் அவனை நோக்கினாள். ஆரம்பத்தில், இரண்டொரு நாள் அவள் நாணிக் கோணி அப்பால் போய் மறைந்து கொண்டாள். ஆனாலும், அதன் பிறகு அவளும் கடைக்கண் பார்வையால் அவனைக் கூர்ந்து நோக்கலானாள். அவன் வலதுகால் அற்றவன் என்பதை அவள் அறியாதவள். ஆதலால், அவனது முகத்தழகு, யெளவனப் பிராயம், அபாரமான செல்வம், கலியாணமாகா நிலைமை முதலியவற்றைக் கருதி அவளும் அவன் மீது இச்சை கொள்ளத் தொடங்கினாள். சில தினங்கள் வரையில் அவர்கள் ஒருவரையொருவர் காண வேண்டும் என்னும் அவாவோடு அடிக்கடி மேன்மாடத்திற்கு வந்ததும், எதிர்ப்பக்கத்தில் தமது பார்வையைச் செலுத்தியதும் நன்றாகத் தெரிந்தன. அவன் பார்க்கும் போது, அவள் நாணிக் குனிவதும், அவள் பார்க்கும் போது, அவன் அப்பால் திரும்புவதும் நடைபெற்றன. பிறகு சில தினங்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் கண்ட காலத்தில், அவர்களை மிஞ்சி அவர்களது முகம் ஆனந்தத்தினால் மலர்ந்து புன்னகை செய்தன. இருவருக்கும் அந்த இன்பம் சொற்பகாலம் வரையில் கிடைத்துக் கொண்டிருந்தது. பிறகு படிப்படியாய் இருவரது கண்களும் சந்தித்து சமிக்ஞை செய்து ஊமை ஜாடை காட்டிக் கொண்டன. கைகள் தந்தி பேச ஆரம்பித்தன. கடைசியில் ஒரு நாள் வக்கீல் ஏதோ காரியார்த்தமாக வெளியூருக்குப் போயிருந்தார். ஆதலால், அன்றைய தினம் ரமாமணி தன்னை நிரம்பவும் லொகுஸாக அலங்கரித்துக் கொண்டு வழக்கத்திற்கு