பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

119

பேரில் எழுதி வைத்து அதில் நாம் முன்னே விவரித்த பள்ளியறை கூடம் முதலிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து வைத்ததோடு, அவள் பொருட்டு தனது செல்வத்தில் பெரும் பாகத்தையும் விரயம் செய்து சொற்ப காலத்தில் அவன் அவளிடத்திலேயே தனது உயிரை வைத்தவனாக மாறிப் போனான். அவ்வாறு ஐந்தாறு மாத காலம் கழிந்தது. மாசிலாமணி அவளிடம் நிகரற்ற காதல் கொண்டு அவளை உயிருக்குயிராய் மதித்திருந்தான். ஆனாலும், அவன் வலதுகால் அற்ற அங்கஹீனன் என்பதை உணர்ந்து கொண்ட ரமாமணியின் மனதில் அந்த ஒரு விஷயத்தில் குறை இருந்து வருத்திக் கொண்டே வந்தது. தனது ஆயுள் காலம் முடிய தான் மாசிலாமணியை விடக்கூடாது என்ற உறுதியும், பிரியமும் அவளது மனதில் வேரூன்றி இருந்தது. ஆனாலும், திரெளபதை, வீராதி வீரர்களான ஐந்து புருஷர்களை மணந்திருந்தும், ஆறாவது புருஷனாகக் கர்ணனை அடைய அந்தரங்கமாக ஆசை கொண்டது போல, ரமாமணியின் மனதில் இரகசியமான ஒரு வேட்கை இருந்து வந்தது. அதாவது, எவ்வித அங்கஹீனமும் இல்லாத கட்டழகனான ஒரு யெளவனப் புருஷன் எவனை யாகிலும் தான் மாசிலாமணிக்குத் தெரியாமல் இரகசியத்தில் காதலனாக வைத்துக் கொண்டு, மாசிலாமணியின் செல்வத்தை அவனுக்கு அள்ளிக் கொடுத்து, அவனை மகிழ்வித்து அவனது பூர்ணமான வாஞ்சையைத் தான் பெறுவதே தான் பிறந்ததற்கு அடையக் கூடிய பெருத்த பாக்கியமாக மதித்தாள். அந்தக் கருத்தைத் தன் மனதிற்குள் அடக்கிக் கொண்டிருந்த ரமாமணி மாசிலாமணி இல்லாத காலங்களில் மெத்தையின் மேல் இருந்தபடி, தெருவிற் செல்லும் விடபுருஷர்களின் திருமேனி அழகை ஆராய்ச்சி செய்த வண்ணம் பகல் முழுதும் காத்திருப்பாள். பல நாட்கள் ஆவலோடு கழிந்த பின்னர் அவள் எதிர்பார்த்த கட்டழகன் அவளது திருஷ்டியில் பட்டான். அன்றைய தினம் நடந்த ஒர் ஊர்கோலத்தில் மேளம் வாசித்துக் கொண்டிருந்த தவில்காரப் பையன் ஒருவன் அவள் கோரிய லட்சணங்கள் எல்லாம் வாய்ந்தவனாகக் காணப்பட்டான். அவனுக்குச் சுமார் இருபது வயது இருக்கலாம். நல்ல கட்டுமஸ்தான தேகமும்,