பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மாயா விநோதப் பரதேதி

மினுமினுப்பான சிவந்த நிறமும், கருத்து அடர்ந்திருந்த செழிப்பான சுருட்டைத் தலைமயிரும், எவ்வித ஊனமும் இல்லாமல் சாமுத்திரிகா லட்சணப்படி அமைந்த கைகால்கள் மார்பு புஜம் முதலிய அங்கங்களும் பெற்று, அப்போதே பக்குவம் அடைந்த யெளவனப் பெண்ணைப் போன்ற வசீகரமான முகக்களை உடையவனாய்த் தோன்றிய தவில்காரப் பக்கிரி என்ற யெளவனப் புருஷன் ஒரு நொடியில் ரமாமணியின் மனதைக் கொள்ளை கொண்டு சென்றான்.

அவளது தாய் தந்தையர் இருவரும் ரமாமணியின் மனப் போக்கின்படி எவ்விதமான துர் நடத்தைக்கும் இனங்கக்கூடிய இழிந்த குணமுடையவர்கள் ஆதலால், தனது தந்தையின் முயற்சியைக் கொண்டே, அவள் மேற்கூறப்பட்ட பக்கிரியின் சிநேகத்தை அடைந்து மாசிலாமணிக்குத் தெரியாமல் அவனைப் பரம அந்தரங்கமாக வருவித்து அவனது விஷயத்தில் கருணை மாரி சொரிந்து, தனது உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் உண்மையில் அவனுக்கே அர்ப்பணம் செய்தவளாய் இருந்து வந்தாள். மாசிலாமணி இராக்காலத்தில் மாத்திரம் வந்து போவதை வைத்துக் கொள்ளவே, பகற்காலம் முழுதும் தவில்காரப் பக்கிரிக்கே உரியதாக இருந்து வந்தது. மனிதர் உலக வியவகாரம் சம்பந்தப்பட்ட வரையில் புருஷன் குழந்தைகள் தாய் தகப்பன் முதலிய உறவினர்களையே தமது நெருங்கிய பந்துக்களாகவும் உயிர் போலவும் மதித்தனர். ஆனாலும், அவர்கள் தமக்குள் உயிருக்குயிராக மறைந்து நிற்கும் கடவுள் ஒருவரே சாசுவதமாக நாடத் தகுந்த ஆப்த பந்துவென்று நினைப்பது போல ரமாமணி மாசிலாமணியின் அபாரமான செல்வத்தையும் பிரியத்தையும் கருதி, எல்லா விஷயங்களிலும் அவனுக்கு அடிமை போல அவனது மனம் கோணாமல் நடந்து வந்தாள். ஆனாலும், தனது உண்மையான காதலை பக்கிரியா பிள்ளைக்கே அர்ப்பணம் செய்திருந்தாள். மாசிலாமணியை ஒரு நிமிஷ நேரம் காணாவிடில், அந்தத் தனிமையைப் பொறுக்க மாட்டாமல் விஷத்தைத் தின்று இறந்து விடலாம் போலிருக்கிறது என்று அவனிடம் பல தடவைகளில் கூறி, அவனது பந்தத்தை முன்னிலும் பன்மடங்கு