பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

மாயா விநோதப் பரதேதி

குடும்ப ரகசியம் முழுதையும் அவள் தெரிந்து கொண்டதன்றி, சட்டைநாத பிள்ளை விடுவித்த விஷயத்திலும் அவள் அவனுக்குப் பேருதவி புரிந்து, தன் பொருட்டு அவள் தனது உயிரையும் விடக்கூடியவள் என்று மாசிலாமணி நினைக்கும்படி நடந்து வந்தாள்.

இத்தகைய குணாதிசயங்கள் வாய்ந்த ரமாமணியம்மாளை இடும்பன் சேர்வைகாரனோடு சென்னைக்கு அனுப்பும் கருத்தோடு மாசிலாமணி அவளது வீட்டை அடைந்த காலத்தில், அவள் அவனது வருகையை எதிர்பார்க்காமல் தவில்காரனோடு அசந்தர்ப்ப நிலைமையில் இருந்தாள். ஆதலால், தனது தகப்பன் குரல் கொடுத்த உடனே திடுக்கிட்டு எழுந்து ஓசை செய்யாமல் நிலைக் கண்ணாடிக் கதவைத் திறந்து பக்கிரியா பிள்ளையை அதற்குள் அனுப்பிவிட்டு கண்ணாடிக் கதவை மறுபடி மூடிய பின், முற்றிலும் அலங்கோலமாகப் போயிருந்த தனது தலைமயிர், ஆடைகள் முதலியவற்றைச் சீர்திருத்திக் கொண்டு அவன் வருவதற்குள் கதவைத் திறந்து விட்டாள். ஆதலால், அவளது தேகம் ஒருவித படபடப்பைக் காட்டியது. அவளது முகம் உள்ளடக்கிய பயத்தையும், ஏமாற்றத்தையும், ஏக்கத்தையும், ஒருவித மினுமினுப்பையும் காட்டியது. கண்கள் இளகிப் பளபள வென்று ஜ்வலித்தன. கைகால்கள் எல்லாம் வெடவெடவென்று நடுங்கத் தலைப்பட்டன. ஆயினும், அவள் எதையோ கவனிப்பவள் போலத் தனது முகத்தைக் கீழே குனியவைத்தபடி தன்னை ஒருவாறு நிர்வகித்துக் கொண்டு, அவனைப் பார்த்துத் தனது இயற்கைப்படி புன்னகை செய்ய முயற்சித்தாள். அந்த முயற்சியில், அவளது முகம் விகாரமுற்றதே அன்றி அழகு பெறாமல் போயிற்று. மாசிலாமணி பிறருக்குத் தீங்கிழைப் பதிலேயே தனது முழு மனத்தையும் செலுத்தி இருந்தவனாதலால், தனது வீட்டில் இருந்து, தனது செல்வங்களை எல்லாம் விரயம் செய்து தன்னையே வஞ்சித்து வந்த உள் கள்ளனைச் சிறிதும் கவனியாமல், ரமாமணி தன்னிடத்தில் உண்மையான பிரேமை வைத்தவள் என்றே மதித்து அவளது முகம் சந்தோஷமற்றதாய் இருந்ததைக் கண்டு,