பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

மாயா விநோதப் பரதேதி

உடனே அவள் அவனது பக்கத்தில் தனது முகத்தைத் திருப்பி சந்தோஷத்தோடு கொஞ்சலாகப் பேசத் தொடங்கி, "நீங்கள் பிரமாணம் செய்வதிலும் கொஞ்சம் பொய் கலந்துதானா பேச வேண்டும்? வேறே எந்த மணியையும் நீங்கள் பார்க்க வில்லையா? அப்படியானால் தங்களையே நிரந்தரமாக நம்பி இருக்கும் அடிமையான இந்த ரமாமணியைக் கூடத் தாங்கள் இது வரையில் சரியானபடி பார்க்கவில்லை என்றல்லவா அர்த்தமாகிறது. அப்படித் தாங்கள் என்மேல் பராமுகமாய் இருக்கலாமா?" என்று கூறிய வண்ணம், மூர்க்கமான உணர்ச்சியை வெளிப்படுத்தி அவனைப் பிடித்தனைத்துக் கொடி போலத் தழுவினாள்.

உடனே மாசிலாமணி பெருமகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்து, "நான் ஒன்று சொன்னால், அதை நீ வேறொன்றாக மாற்றிப் பேசுவதில் நிரம்பவும் திறமைசாலி அல்லவா! அதை இப்போது காட்டுகிறாய் போலிருக்கிறது. உன்னை நான் இதுவரையில் சரியானபடி கவனித்தேனா இல்லையா என்பது உன் மனசுக்கே தெரியவில்லையா? அப்படி இருக்க, நீ அதைப்பற்றி ஏன் குத்திக் காட்ட வேண்டும்? உன்னை நான் என்னுடைய உயிராக மதித்திருக்கிறேன் என்பதை எத்தனையோ விஷயங்களில் இருந்து நிச்சயமாக நீ தெரிந்து கொண்டிருப்பாய். என்னுடைய குடும்ப ரகசியங்களை எல்லாம் நான் உன்னிடத்தில் வெளியிட்டிருப்பதில் இருந்தே, நான் உன்னை எப்படி மதித்திருக்கிறேன் என்பது சுலபத்தில் விளங்கிப் போவதோடு, இனி எப்போதும் உன்னை நான் புறக்கணிக்கக் கூடியவனல்ல என்பதும் நிச்சயமாகத் தெரிந்து போகும். நீயும் எனக்காக எவ்வளவோ பெரிய காரியங்களை எல்லாம் முடித்திருக்கிறாய். இனியும் நீ எனக்குப் பெரிய பெரிய காரியங்களைச் செய்யப் போகிறாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது நான் இங்கே வந்ததுகூட, உன்னிடம் ஒரு ரகசிய விஷயத்தில் உன்னுடைய உதவியை நாடியே தான் வந்தது. அதை நீ துணிந்து செய்வாயோ, அல்லது பயந்து கொண்டு முதுகைக் காட்டுவாயோ என்னவோ அதுதான் சந்தேகமாக இருக்கிறது" என்றான்.