பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

129

ரமாமணி முன்னிலும் அதிகப் பரவசமும் மனவுருக்கமும் குழைவும் காண்பித்து, "ஓ! அப்படியா சங்கதி! ஆண் பிள்ளைகளின் தந்திரமோ இது! எங்களால் ஏதாவது காரியம் ஆக வேண்டுமானால், எங்களிடம் வந்து கண்ணே என்றும், தங்கமே என்றும் கொஞ்சுகிறது. அதைக் கேட்டவுடனே எங்களுக்கு உச்சி குளிர்ந்து போகிறது. நாங்கள் உடனே உங்கள் இஷ்டப்படி தலைவிரித்தாடுகிறது. உலக நியாயம் நன்றாக இருக்கிறது! நீங்கள் என்ன செய்வீர்கள். பெண் பிள்ளைகள் எல்லாம் ஆண் பிள்ளைகளின் இஷ்டம் போல ஆடும் பொம்மைகளாக இது வரையில் இருந்து தங்களுடைய கண்ணியத்தையே குறைத்துக் கொண்டு வந்து விட்டபடியால், நீங்களும் என்னிடம் அது போலவே பெரிய விஷயங்கள் எல்லாம் என் உதவியை எதிர்பார்க்கிறீர்கள் போலிருக்கிறது? இருக்கட்டும். பரவாயில்லை. தங்களுக்கு என்னால் எவ்வித உதவி தேவையானாலும், நான் பின் வாங்கக் கூடியவளல்ல; சொல்லலாம். எந்த நிமிஷத்தில் நான் உங்களை முதன் முதலில் கண்டு மயங்கினேனோ, அப்போதே நான் என்னுடைய உடல், பொருள், ஆவியாகிய மூன்றையும் உங்களுக்கே ஒப்புவித்து விட்டேன். அப்போது ஏற்பட்ட உங்கள் மயக்கம் இனி என் உயிர் போன பிறகு மறுஜென்மத்தில் கூட என்னை விடாது போலிருக்கிறது. அவ்வளவு தூரம் தாங்கள் சொக்குப் பொடி போட்டு என்னை மோகிக்கச் செய்து என் மனசையும் உடம்பையும் சீர்குலைத்து விட்டீர்கள். எவரும் துணிந்து செய்ய முடியாத காரியமாகிய பெருத்த கொலைக் குற்றத்தை நான் செய்யும்படி தூண்டியது உங்களுடைய மோகமே அன்றி வேறல்ல என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் இப்போது என்னிடம் கோரும் உதவி அந்தக் கொலையை விடக் குறைந்ததாக இருக்குமேயன்றி, அதிகக் கொடுமையானதாக இருக்காது என்பது நிச்சயம். அந்த உதவியைச் செய்ய நான் இணங்கிவிட்டதாகவே வைத்துக் கொண்டு நீங்கள் விஷயத்தைச் சொல்லலாம்" என்று கிள்ளை மொழிவது போலக் கொஞ்சலாக மொழிந்தாள்.

உடனே மாசிலாமணி அளவற்ற குதுகலமும் பூரிப்பும் அடைந்தவனாய், "உனக்கு ஏதாவது அபாயம் வரும்படியான
மா.வி.ப.II-9