பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

மாயா விநோதப் பரதேசி

மறைத்து வேறே ஊருக்குப் போவதாகச் சொன்னால். ஒருவேளை போலீசார் நாம் டிக்கெட்டு வாங்கும் போது அங்கே வந்திருந்து உண்மையைத் தெரிந்து கொள்வார்கள். அல்லது, நாம் வேறே யாரையாவது விட்டு, டிக்கெட்டு வாங்கிவரச் சொன்னாலும், நாம் உள்ளே நுழையும் போது, பரிசோதகரிடம் காட்டுவோம் ஆகையால், அதற்கு முன்னாலேயோ போலீசார் அவரிடம் சொல்லி வைத்து, நான் போகும் ஊரின் பெயரைக் கவனித்துச் சொல்லும்படி செய்வார்கள். நாம் பட்டணம் போனோம் என்பதை எப்படியும் போலீசார் தெரிந்து கொள்வார்கள். நாம் பட்டணத்தில் நம்முடைய எதிரிகளை அங்கஹீனப்படுத்திய மறுநாள் அந்த விஷயம் ஒருவேளை சமாசாரப் பத்திரிகைகளில் வெளியாகலாம். அவர்கள் நமக்கு விரோதிகள் என்பது போலீசாருக்குத் தெரியும். ஆதலால் நான் அந்த ஊருக்குப் போனதை அதோடு சம்பந்தப்படுத்தி, நானே அந்தக் காரியத்தைச் செய்தவன் என்று அனுமானித்துக் கொள்வார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அன்றைய தினம் நான் இங்கே இருந்து போலீசாருடைய புஸ்தகத்தில் கையெழுத்துச் செய்திருந்தால், அது ஒன்றே எனக்கு அனுகூலமான சாட்சியாய் உபயோகப்படும். ஆகையால், நீ எப்படியாவது உன் மனசை சமாதானப்படுத்திக் கொண்டு புறப்பட்டுப்போய், நாம் நிரம்பவும் முக்கியமாக எண்ணியுள்ள இந்தப் பழியைத் தீர்த்துக் கொண்டு வந்துவிடு; நீ செய்யப் போகும் இந்தப் பேருதவியை நான் என் ஆயிசுகால பரியந்தம் மறக்கவே மாட்டேன்" என்றான்.

அதைக் கேட்ட ரமாமணியினது கண்கள் கலங்கின. அவற்றில் இருந்து கண்ணீர்த் துளிகள் பொங்கி வழிந்தன. உடம்பு படபடத்து நடுங்கியது. "இங்கே நீங்கள் ஒவ்வொரு நாளும் இரவில் வருவதற்குள், உங்களைக் காணாமல், என் கண்கள் பூத்துப் போகின்றன, என் உடம்பு பறக்கிறது. உயிரோ தள்ளாடுகிறது. இந்தப் பாழும் பகற் பொழுது எப்போது போகும் போகும் என்று நான் கோவிலில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டே இருக்கிறேன். இரவில் நீங்கள் வந்து