பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

133

விட்டால், இராப்பொழுது விடியவே கூடாதென்று முன் காலத்தில் நளாயனி சாபம் கொடுத்தது போல நானும் கொடுக்கலாமா என்றுகூட நினைக்கிறேன். ஆனால், இந்தப் பாழும் உலகத்தில் உள்ள ஏற்பாட்டின்படி, நான் உண்மையான பதிவிரதையல்ல என்று நினைத்து சூரியன் என் வார்த்தையை இலட்சியம் செய்யாமல் உதித்து விடுவானோ என்ற எண்ணம் உண்டாகிறது. உண்மையில் பார்த்தால் என்னுடைய பதிவிரதைத் தனத்திற்கு நளாயனி முதலியோரின் பதிவிரதைத்தனம் ஈடாகும் என்று சொல்ல முடியாது" என்றாள்.

மாசிலாமணி, ஏனென்றால், வக்கீல், மாசிலாமணி ஆகிய இரண்டு புருஷரை நீ அடைந்தாயே!; அதனால், உன் பதிவிரதைத் தனம் மேலானதென்று நினைக்கிறாய் போலிருக்கிறது" என்று பரிகாசமாக நகைத்துக் கூறினான்.

ரமாமணி, "அப்படியல்ல. எப்போதும் ஒரே புருஷனை நாடி அவனிடம் உண்மையாகவே இருந்து பழகிப் போன பெண்கள் இயற்கையிலேயே அதே வழியில் போவார்கள். ஆகையால், அது ஒரு பெரிய காரியமல்ல. ஒரு புருஷனை விட்டு வேறு புருஷனைப் பிடித்து, அந்தச் சுகத்தைக் கண்டவர்களுக்கு மேன் மேலும் அதே வழியில் போக வேண்டும் என்ற எண்ணமே உண்டாகும். ஆகையால், அவர்கள் தங்களுடைய மனசை அடக்கி ஒரு நிலைப்படுத்தி அதன்பிறகு ஒரே புருஷனிடம் உறுதியாக இருப்பது சாத்தியமற்ற அபாரமான செய்கை. அதன் பிறகு அவர்கள் பதிவிரதைத் தனத்தைக் காப்பாற்றிக் கொள்வ தென்பதே முடியாத காரியம். மற்ற எவராலும் செய்ய முடியாத அந்த அரிய காரியத்தை நான் செய்து வருகிறேன். வக்கீலைத் தொலைத்ததுகூட நான் உங்கள் மேல் வைத்திருந்த அபாரமான பிரேமையினால் அல்லவா. அவன் தொலைந்த பிற்பாடு நாம் இருவரும் ஓருயிரும் ஈருடலுமாக இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். ஆகையால், என்னுடைய கற்பு உயர்வானதா நளாயனியின் கற்பு உயர்வானதா? நீங்களே சொல்லுங்கள்" என்றாள்.