பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

மாயா விநோதப் பரதேசி

ரமாமணி தனது கையால் வாஞ்சையோடு அவனது உருண்டைக் கன்னத்தைத் தடவிக் கொடுத்த வண்ணம் குழந்தை போலக் கொஞ்சத் தொடங்கி, "நான் பட்டணம் போவதாய் இருந்தால், அதை நான் சந்தோஷ சங்கதி என்று சொல்லுவேனா? நீயும் என்னோடு கூட வரவேண்டும். நான் ஆயிரம் ரூபாய் கேட்டதற்கு, நொண்டி இரண்டாயிரமாகக் கொடுத்திருக்கிறான். நாம் இருவரும் பட்டணத்தில் பத்துப் பதினைந்து நாள் சந்தோஷமாக இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு வருவோம்" என்று கூறினாள்.

பக்கிரியா பிள்ளை , "மறுநாளே வந்து விடுவேன் என்று நீ நொண்டியிடம் சொன்னாயே!" என்றான்.

ரமாமணி, "நான் நொண்டியிடம் சொல்வதெல்லாம் வேத வாக்கியமா என்ன? அவன் கோரிய காரியத்தை முடித்த பிறகு, தூரப் பிரயாணத்தினால், எனக்கு அலுப்பாய் இருப்பதால், நான் இரண்டொரு நாள் இருந்து வருவதாகச் சொல்லி இடும்பன் சேர்வைகாரனை அனுப்பி விடுகிறேன். பிறகு நம்முடைய இஷ்டம் போல வருவோம். நொண்டி கேட்டால், எனக்கு ஜுரம் வந்து விட்டதென்றும், பிழைத்து வந்தது புனர் ஜென்மம் என்றும் சொல்லி விடுகிறேன். அதை அவன் உண்மை என்றே நம்பி விடுவான்" என்றாள்.

பக்கிரியா பிள்ளை, "அது சரிதான். இடும்பன் சேர்வைகாரன் உன்னோடு வரும்போது நானும் எப்படிக்கூட வருகிறது?" என்றான்.

ரமாமணி, "நீ இங்கே வரவேண்டாம். சாயுங்காலம் ரயிலடிக்கே நேராக வந்துவிடு. நான் என்னோடு அப்பாவை அழைத்துக் கொண்டு, இடும்பன் சேர்வைகாரன் மூன்றாவது வகுப்பு டிக்கெட்டு வாங்கிக் கொண்டு வேறே வண்டியில் ஏறும்படி செய்கிறேன். அப்பாவைவிட்டு நமக்கு முதல் வகுப்பு டிக்கெட்டுகள் வாங்கச் சொல்லி, ஒன்றை ரகசியமாக உன்னிடம் கொடுக்கச் சொல்லுகிறேன். நீ எங்களுக்குச் சம்பந்தமில்லாமல் வேறே எங்கேயோ போகிறவன் போல, நாங்கள் ஏறும் முதல்