பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

139

வகுப்பு வண்டியில் வந்து ஏறிவிடு. பட்டணத்தில் நாம் இருக்கும் இடத்தைப்பற்றி பிற்பாடு யோசித்துக் கொள்வோம்" என்றாள்.

பக்கிரியா பிள்ளை , "சரி; அப்படியே செய்து விடுவோம். அப்பாவும் நம்மோடு பட்டணம் வரும் பக்ஷத்தில் இடும்பன் சேர்வைகாரனை நீ சுலபத்தில் ஏமாற்றிவிடலாம். ஏனென்றால், நானும் ஏதோ சொந்தக் காரியமாகப் பட்டணம் வருவதாயும், எனக்கும் அப்பாவுக்கும் இதற்கு முன் கொஞ்சம் பரிச்சயம் இருப்பதால், ரயிலில் கண்டு, ஒருவருக்கொருவர் பேச்சுத் துணையாய் இருக்கும் என்று ஒன்றாய்க் கூடி வந்ததாகவும் அவனிடம் சொல்லிவிட்டால், அவன் நம்பிவிடுவான்" என்றான்.

அதைக் கேட்ட ரமாமணி, "கண்ணு! அந்தக் கவலை எல்லாம் உனக்கு எதற்காக? இவர்களை எல்லாம் ஏமாற்றுகிறதற்கு நான் இருக்கிறேன். நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். நான் நொண்டியோடு பேசியதை எல்லாம் நீ கேட்டுக் கொண்டிருந்தாய் அல்லவா. அவன் நம்பும்படி நான் நளாயனி முதலியவர்களை எல்லாம் இழுத்துப் போட்டு நாடகம் ஆடியது எப்படி இருந்தது நீ பார்க்கவில்லையா?" என்றாள்.

பக்கிரியா பிள்ளை ஆனந்தமாக நகைத்து, "ஆம் ஆம். எல்லாவற்றையும் நான் நன்றாகக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஆனால், நாம் இன்னம் எவ்வளவு காலத்திற்கு இப்படி ஒளிந்து பிழைக்கிறதென்ற விசனந்தான் என் மனசைப் புண்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த நொண்டி உன்னை அணைத்துக் கொண்டதை உணர்ந்தபோது என் மனம் எவ்வளவு தூரம் கொதித்தது தெரியுமா?" என்றான்.

ரமாமணி, "கண்ணு! இன்னம் கொஞ்சம் பொறுத்துக் கொள், அந்த எண்ணம் என் மனசில் இல்லை என்றா நினைக்கிறாய். நானும் ஓயாமல் அதே கவலையாகத்தான் இருக்கிறேன். இந்த நொண்டியின் சொல்படி நடந்து இவனுடைய சொத்தில் ஒரு லட்சம் ரூபாயாவது ரொக்கமாகக் கறந்து கொண்டு, வக்கீலை ஒழித்த மாதிரி, இவனுக்கும் ஒரு நாள் விஷம் போட்டு ஒழித்துவிட வேண்டும். அதன் பிறகு நாமே ராஜா. நாம்