பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மாயா விநோதப் பரதேசி

கூடவே அழைத்துக் கொண்டு சென்றனர். இவ்வாறு அவர்கள் இரவு பகல் எதிரிகளை மறவாமல் எச்சரிப்பாக இருந்தபடியே, நிச்சயதார்த்த முஸ்தீப்புகளை எல்லாம் செய்து முடித்தனர்.

செவ்வாய்க்கிழமை தினம் காலையில் வேலாயுதம் பிள்ளை தமது வழக்கப்படி. அனுஷ்டானம், பூஜை முதலியவற்றை முடித்த பின்னர் தமது மாளிகை முழுதும் நிறைந்திருந்த சாமான் பெட்டிகளை எல்லாம் சுற்றிப் பார்த்து, எல்லா ஏற்பாடுகளும் நிரம்பவும் திருப்திகரமாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை உணர்ந்து மிகுந்த மனமகிழ்ச்சியோடு விசிப்பலகையின் மீது உட்கார்ந்து கொண்டு "தம்பீ! தம்பீ!" என்று உரக்க இரண்டு குரல் கூப்பிட்டார். மேன்மாடத்தில் வடிவாம்பாளோடு சம்பாஷித்துக் கொண்டிருந்த கண்ணப்பா "ஏன் அப்பா! இதோ வந்தேன்” என்று நிரம்பவும் பயபக்தி விநயத்தோடு மறுமொழி கூறிவிட்டு தடதட வென்று கீழே இறங்கி ஓடிவந்து தனது தந்தைக்கு எதிரில் இருந்த ஒரு கம்பத்தின் மறைவில் வணக்கமாக நின்று "ஏன்" என்றான்.

உடனே வேலாயுதம் பிள்ளை, "தம்பீ! வரவேண்டிய சாமான்கள் எல்லாம் வந்துவிட்டனவா? இன்னமும் ஏதாவது பாக்கி இருக்கிறதா?" என்றார்.

கண்ணப்பா கீழே குனிந்தபடி மிருதுவான குரலில் பேசத் தொடங்கி, "ஒன்றும் பாக்கி இல்லை. இன்னம் வெற்றிலை, காய்கறிகள் இரண்டையும் விட்டிருக்கிறேன். அவைகளை நாம் இப்போதே சேகரம் செய்து வைத்திருந்து இங்கே இருந்தே கொண்டு போனால் எல்லாம் அழுகிப்போகும். அவைகளை அந்த ஊரிலேயே வாங்கிக் கொள்ளலாம். கொஞ்சம் விலை ஏற்றமாக இருந்தாலும், இருந்துவிட்டுப் போகட்டும்" என்றான்.

வேலாயுதம் பிள்ளை , "சரியான யோசனை. அவைகளைப் - பட்டணம் கொத்தவால்சாவடியில் வாங்கிக் கொள்வோம். விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. காய்கறிகளும் வெற்றிலையும் புதிதாக இருப்பதே முக்கியம். அதிருக்கட்டும். நாளைய