பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

மாயா விநோதப் பரதேசி

புரசைப்பாக்கத்தில் ஒரு பெரிய பங்களாவில் இருந்து வருகிறார்கள். அந்தப் பெண்ணை மன்னார்குடியில் உள்ள பிரபல மிராசுதாரான வேலாயுதம் பிள்ளையின் இளைய குமாரர் கந்தசாமி பிள்ளைக்குக் கலியானம் செய்வதாக அவர்கள் நிச்சயித்து, அடுத்த வெள்ளிக்கிழமை அன்று நிச்சயதார்த்தத்தைப் புரசைப்பாக்கம் பங்களாவில் நடத்த உத்தேசித்தார்களாம். சென்ற சனிக்கிழமை அன்று பகலில் பட்டாபிராம பிள்ளை அவரது கச்சேரிக்குப் போயிருந்தாராம். அவருடைய குமாரத்தி பங்களாவின் மேன்மாடத்தில் படித்துக் கொண்டிருந்தாளாம். வேலைக்காரரும் வேலைக்காரிகளும் கீழே இருந்தார்களாம். அப்போது, ஒரு யெளவனப் புருஷரும், யெளவன ஸ்திரீயும் தமது வேலைக்காரியோடு வந்து தாங்கள் கோமளேசுவரன் பேட்டையில் உள்ளவர்கள் என்றும், வேலாயுதம் பிள்ளையின் மைத்துனியும், மைத்துணி புருஷர் என்றும், பெண்ணைப் பார்த்துவிட்டுப் போக வந்திருப்பதாகவும் சொன்னார்களாம். அவர்களை வேலைக்காரி ஒருத்தி பெண்ணினிடம் அழைத்துக் கொண்டு போய்விட்டாளாம். பெண் அவர்கள் வந்திருக்கும் செய்தியை டெலிபோன் மூலமாக உடனே தனது தகப்பனாருக்குத் தெரிவித்தாளாம். தகப்பனார் எப்படியோ சந்தேகங்கொண்டு உடனே மன்னார்குடிக்குத் தந்தி அனுப்பி பதில் தந்தி வருவித்தாராம். பதில் தந்தியில் வேலாயுதம் பிள்ளை, தமக்கு மைத்துனியே யாரும் இல்லை என்றும், வந்திருப்பவர் ஒரு வேளை தமது பகைவரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், ஜாக்கிரதையாக நடந்து கொள்ளும்படிக்கும் எழுதி இருந்தாராம். அதை உணர்ந்த பட்டாபிராம பிள்ளை உடனே தமது பங்களாவிற்கு வந்து, அவர்களைக் கண்டு உண்மையைக் கேட்க, அவர்கள் உண்மையான வரலாற்றைச் சொல்ல மறுத்து விட்டனராம். ஆகவே, பட்டாபிராம பிள்ளையும் போலீசாரும் சேர்ந்து விருந்தாளியாக வந்தவர்களைத் தனித்தனியான இரண்டிடங்களில் அடைத்துப் பூட்டி வைத்திருந்தனராம். அன்றைய தினம் இரவு 12-மணி சமயம் இருக்குமாம். சுமார் 15 முரட்டாள்கள் திடீரென்று பங்களாவில் நுழைந்து பட்டாபிராம