பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

மாயா விநோதப் பரதேசி

பொழுது விடிந்த பிறகுதான் அவளுக்குத் தெரியுமாம். காலையில் அவள் எழுந்து போய்த்தான் போலீசாரைத் தருவித்தாளாம். போலீசார் நிரம்பவும் பாடுபட்டுத் துப்பு விசாரித்து வருகிறார்கள்

--என்று கண்ணப்பா படித்து முடித்தான்.

அந்த வரலாற்றை உணர்ந்த நால்வரும் அளவற்ற வியப்பும் பிரமிப்பும் அடைந்தனர். உடனே வேலாயுதம் பிள்ளை, “இந்த வரலாறு நிரம்பவும் புதுமையாக அல்லவா இருக்கிறது. அன்றைய தினம் பட்டாபிராம பிள்ளை நமக்கு அனுப்பிய தந்திக்கு நாம் பதில் அனுப்பினோமே. அதன் பிறகு எவ்விதமான தகவலும் தெரியவில்லையே என்று நான் நினைத்துக் கொண்டே இருந்தேன். அது இப்படியா முடிந்தது? அன்றைய தினம் பகலில் வந்த இருவரும் யாராய் இருக்கலாம் என்பது தெரியவில்லையே; என்ன கருத்தோடு நம்முடைய உறவினர் என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள் என்பதும் மனோன்மணி யம்மாளோடு என்னென்ன சங்கதிகள் பேசினார்கள் என்பதும் தெரியவில்லை. அவர்கள் சாதாரணமாகக் கொள்ளையடிக்க வந்தவராகத் தோன்றவில்லை. அந்த எண்ணத்தோடு வந்திருந்தால், இரவில் வந்த ஆள்கள் பங்களாவில் இருந்த பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போயிருப்பார்கள் அல்லவா?” என்றார்.

உடனே திரிபுரசுந்தரியம்மாள் பேசத் தொடங்கி, “அவர்கள் சாதாரணத் திருடர்களாக இருந்தால், நம்முடைய வரலாறெல்லாம் அவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது! அவர்கள் அந்த மாசிலாமணியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். நாம் அந்தப் பெண்ணைக் கட்டப்போகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு, நம்முடைய சொந்தக்காரர் போலப் பெண்ணினிடம் போய் அதன் மனதைக் கலைக்க எண்ணியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்களை சிறை வைத்ததை உணர்ந்து ஆள்கள் வந்து விடுவித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். அந்தப் பெண் ஆதியில் மாசிலாமணிக்குப் பேசப்பட்ட பெண்ணல்லவா. அந்த எரிச்சலினால், ஏதாவது கெடுதல்