பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

155

யாரைக் கொண்டாவது பையனை வஞ்சித்து ரகசியமான எந்த இடத்திற்காவது அழைத்துக் கொண்டு போய் ஏதாவது கெடுதல் செய்திருப்பார்களா, அல்லது, சாதாரணமாய்ப் போனபோது மோட்டார் வண்டியினால் ஏதாவது அபாயம் நேரிட்டு இருக்குமா?” என்று அளவற்ற விசனத்தோடு கூறினார்.

கண்ணப்பா, “மோட்டாரினால் விபத்து ஏற்பட்டிருந்தால், அது போலீசாருக்கு அவசியம் தெரிந்து போயிருக்கும் ஆகையால், எதிரிகள்தான் ஏதாவது மோசடி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாம் ஒரு பெருத்த தவறு செய்துவிட்டோம்: சுவாமியார் ஐயா நம்மை எச்சரித்தவுடனே, அதை நாம் பட்டணத்திற்கு எழுதி, எதிரிகள் நம்மீது கத்தி தீட்டிக் கொண்டிருப்பதால், ஜாக்கிரதையாக இருக்கும்படி தெரிவித்திருக்க வேண்டும். அது நம்முடைய மனசில் படாமல் போய்விட்டது. எதிரிகள் அவ்வளவு தூரமான இடத்திற்குப் போகப் போகிறார்களா என்று நினைத்து நாம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டோம். அது இப்போது பெருத்த அநர்த்தத்தை உண்டாக்கிவிட்டது” என்று கூறி நிரம்பவும் பரிதவித்தான்.

வேலாயுதம் பிள்ளை, “தம்பீ! இதெல்லாம் கடவுளின் சோதனையே அன்றி வேறல்ல. உண்டாக்குகிறவனும் அவனே. இல்லையாக்குகிறவனும் அவனே. நாம் ஒரு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருந்தால், நாம் எதிர்பார்க்காத இன்னொரு விஷயத்தில் ஏதாவது துன்பம் வந்து சேருகிறது. ஆகையால், நம்முடைய கெட்ட வேளையில், நாம் ஏதாவது துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று இருந்தால், நாம் எவ்வளவு தான் முன் எச்சரிக்கையாக இருந்தாலும், எந்த விதத்திலாவது துன்பம் வந்து தான் தீருகிறது. எல்லாப் பொறுப்பையும் நாம் கடவுளின் மேல் போட்டு நம்மாலான முயற்சியைச் செய்தால், எல்லாம் கடைசியில் நன்மையாகவே முடியும். இருக்கட்டும். நீ ஒரு காரியம் செய். உடனே தந்தி ஆபீசுக்குப் போய், கந்தசாமி இங்கே இல்லை என்றும், நாம் எல்லோரும் இன்றைய இரவு வண்டியிலேயே புறப்பட்டு அங்கே வருகிறோம் என்றும் சம்பந்திப் பிள்ளைக்கு அவசரத் தந்தி கொடுத்துவிட்டு, உடனே