பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

மாயா விநோதப் பரதேசி

கும்பகோணம் போய், இந்த விவரங்களை எல்லாம் பாலத்தின் கீழ் எழுதி வைத்துவிட்டு சீக்கிரமாக வந்து சேர். பட்டாபிராம பிள்ளை உன்னை அனுப்பும் படி எழுதி இருக்கிறார். உன்னைத் தனியாக அனுப்ப பயமாக இருக்கிறது. அதுவுமன்றி, இந்தச் சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போவதற்கு அவசியமான நீயே போகும் போது, நாங்கள் மாத்திரம் இங்கே இருந்து என்ன செய்யப் போகிறோம். ஆகையால், நாம் எல்லோருமே புறப்பட்டு இன்றைய இரவு வண்டியில் பட்டணம் போவோம். நம்முடைய அண்ணன் நடராஜ பிள்ளை சுவாமி தரிசனத்திற்குக் கோவிலுக்குப் போயிருக்கிறார்கள். அவர்கள் வந்தவுடன், எல்லாவற்றையும் அவர்களுடைய வசத்தில் விட்டு, ஆள்களையும் காவல் போட்டு விட்டுப் போவோம். பட்டணத்தில் கந்தசாமி அகப்பட்டுவிட்டால் நாம் உடனே தந்தி அடிப்போம். அண்ணன் இந்தச் சாமான்களை எல்லாம் வண்டியில் வைத்துக் கொண்டு, நம்முடைய பந்துக்களையும் அழைத்துக் கொண்டு பட்டணம் வந்து சேரட்டும்” என்றார். கண்ணப்பாவுக்கும், மற்றவருக்கும் அந்த யோசனை உசிதமான தெனத் தோன்றியது. கண்ணப்பா தந்தி ஆபீசுக்குப் புறப்பட எத்தனித்த காலத்தில் வடிவாம்பாள், “அந்தப் படம் யாருடையது என்று பார்க்கவில்லையே" என்றாள். உடனே வேலாயுதம் பிள்ளை தமது மடியில் கிடந்த புகைப்படத்தை எடுத்து மேல்காகிதத்தை விலக்கி விட்டு, அதற்குள் காணப்பட்ட வடிவத்தை உற்றுநோக்கி வியப்படைந்து, “இவன் யரோ நமக்கு அறிமுகமான மனிதன் போல் அல்லவா இருக்கிறான். இன்னான் என்பது விளங்க வில்லையே!” என்று கூறிய வண்ணம் அதைக் கண்ணப்பாவிடம் கொடுக்க, அவனும் திரிபுரசுந்தரி அம்மாளும் அதைக் கூர்ந்து நோக்கினர். உடனே திரிபுரசுந்தரியம்மாள், “இது கோபாலசாமியின் சாயலாக இருக்கிறது!” என்றாள்.

உடனே கண்ணப்பா, “ஆம், ஆம். இது கோபாலசாமி தான். என்ன ஆச்சரியம் இது இவன் எதற்காக அவர்களுடைய பங்களா விற்குப் போனான் நம்முடைய எதிரியின் ஆள்களோடு இவன் எப்படி சம்பந்தப்பட்டான் என்பது விளங்கவில்லையே!” எனறான.