பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

மாயா விநோதப் பரதேசி

பார்ப்பதற்குள், என் பாடு திண்டாட்டமாகி விட்டது. நான் ஸ்டேஷனுக்குள் நுழைந்து பார்த்தவுடன், ஏன் இந்தப் பரிதாபகரமான காட்சியைப் பார்த்தோம் என்று ஆகிவிட்டது. சுமார் ஐம்பது வயதான ஒரு பெரியவருடைய வலது காதும், ஒரு பெரிய அம்மாளுடைய இடது காதும் அடியோடு அறுபட்டுப் போதுவிட்டன. அவர்கள்தான் ரீமான் பட்டாபிராம பிள்ளையின் சம்பந்திகள் என்று சொல்லிக் கொண்டார்கள். சுமார் இருபத்தைந்து வயதுள்ள ஒரு யெளவனப் புருஷனுடைய இரண்டு கண் களும் பலாக்காய் கொத்துவது போலக் கொத்தப்பட்டுப் போயிருந்தன. அழகே வடிவாக அமைந்துள்ள சுமார் 20-வயதுள்ள ஒரு யெளவன ஸ்திரீயின் மூக்கு அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டுப் போனதால் அவள் மூர்ச்சித்துப் பிணம்போலக் கிடந்தாள். சுமார் 20-வயதுள்ள அழகான இன்னொரு யெளவனப் புருஷனது முகத்தில் அக்கினித் திராவகம் கொட்டப்பட்டதால், முகம் முழுதும் குழைகறியாக வெந்துபோயிருக்கிறது. அவன் துடிதுடித்து உயிர்க் கழுவில் நின்றவன் போல அலறிப் புரண்டு கொண்டு கிடந்தான். அவனே பட்டாபிராம பிள்ளையின் பெண்ணைக் கட்ட வந்த மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். இந்த மகா பயங்கரமான காட்சியைக் காணச் சகியாதவனாய், நான் அவ்விடத்தைவிட்டு, உடனே வெளியில் வந்து, நான் போய் உத்தேசித்த இடத்திற்குப் போய்விட்டேன். விரிவான வரலாற்றை நன்றாக விசாரித்து மறுபடி எழுதுகிறேன்”

என்று எழுதப்பட்டிருந்த செய்தியை விருந்தாளி ஒருவர் படிக்கவே, அதைக்கேட்ட சுந்தரம் பிள்ளை, நடராஜ பிள்ளை, சிவக்கொழுந்தம்மாள், மற்ற விருந்தினர் முதலிய எல்லோரும் எவ்விதமான நிலைமையை அடைந்திருப்பார் என்பதை யூகித்துக் கொள்வது சுலபமானதன்றி அதை விவரித்து எழுதுவது சாத்திய மற்ற காரியம் என்றே சொல்ல வேண்டும். சுருங்கக் கூறுமிடத்து, ஒரு நாழிகை காலம் வரையில் எல்லோரது உயிரும் உடம்பை விட்டுப் போய்விட்டதென்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அவர்கள் எல்லோரும் அலறியடித்துக் கொண்டு அன்றைய மாலை, ரயிலில் சென்னைக்குப் பிரயாணமாயினர்.