பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

161


10 - வது அதிகாரம்
சோபனப் பெண்

மன்னார்குடி சுந்தரம் பிள்ளை முதலியோர் ஞாயிறன்று சென்னையிலிருந்து வந்த சமாசாரப் பத்திரிகையைப் படித்து, அதில் வெளியிடப்பட்டிருந்த விபரீதச் செய்தியைக் கண்டு, பெருந்திகிலும், குலைநடுக்கமும், சித்தப்பிரமையுமடைந்து, பதை பதைத்து, அன்றையதினம் மாலை வண்டியில் புறப்பட்டுச் சென்னைக்குப் போயினரென்ற விவரம் முந்திய அதிகாரத்தின் முடிவில் கூறப்பட்டதல்லவா. அந்தக் கிழமைக்கு முந்திய செவ்வாயன்று இடும்பன் சேர்வைகாரன், ரமாமணி முதலியோர் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டுச் சென்னைக்குப் போய், அவ்விடத்தில் என்ன செய்தார்கள் என்பதையும், அவர்கள் நிறைவேற்ற எண்ணிய அங்கஹரீனம் நடைபெற்ற விவரத்தையும் நாம் கூறுமுன், கும்பகோணம் பெரிய தெருவில் மாசிலாமணியினது மாளிகையில் பெண் வேஷத்தோடு சிறைவாசம் செய்து வந்த கந்தசாமிக்கு அன்றைய தினம் இரவில் அவ்விடத்தில் சோபன முகூர்த்தம் நடைபெற்ற வைபவத்தை விஸ்தரிப்போம்.

அன்றைய தினம் பகலில் மாசிலாமணி, இடும்பன் சேர்வை காரனோடு சம்பாவித்த பிறகு, தனது ஆசை நாயகியான ரமாமணி அம்மாளிடம் போய், அவளும் சென்னைக்குப் போக இணங்கும் படி செய்து, வழிச் செலவிற்குப் பணமும் கொடுத்து விட்டுத் தனது மாளிகைக்கு வந்து அன்றைய பகல் பொழுது எப்போது தொலையும் தொலையுமென்று ஆவலே வடிவாகத் தவித்திருந்தார் என்று முன்னரே கூறினோமல்லவா. அன்றைய தினம் மாலைப் பொழுது வருவதற்குள் அவன் தனது மிதமிஞ்சிய ஆவலில் உண்மையிலேயே பைத்தியம் கொண்டவன் போல் சித்தக் கலக்க மடைந்துவிட்டதன்றி, புதிதாகக் கூண்டில் அடைக்கப்பட்ட கொடிய வேங்கைப்புலி போல தனது விடுதியில் இருக்கை கொள்ளாதவனாய்த் தத்தளித்துத் தவித்துக் கொண்டிருந்தான். காமாந்தகாரமே வடிவெடுத்தது போல அமைந்திருந்த அவனது மனம் கட்டிலடங்காமல் பம்பரம் போலச் சுழன்று கொண்டு இருந்தது. கனிந்த யெளவனப் பருவமும், அற்புதமானமா.வி.ப.II-11