பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

163

போல புதிய புதிய ஸ்திரிகளை அடைய விரும்பும் காமாதுரர்கள் நூற்றிற்குப் பதின்மரே இருப்பரென நாம் ஓர் உத்தேசமாகக் கனக்கிடலாம். அவர்களுக்கு ஒருத்தியைவிட, மற்றவள் அதிக அழகாக இருக்க வேண்டுமென்ற நியதியே அவசியமில்லை. அவர்களுக்கு வாய்த்த ஸ்திரீ ரதிதேவி, இந்திராணி, மகாலகஷ்மி முதலியோரின் அவதாரமாகவே இருந்தாலும், அவர்களது ஆசைப்பேய் தணிவடைகிறது மில்லை; கட்டில் அடங்குகிறது மில்லை. அவர்களது வீட்டில் குற்றேவல் செய்யும் ஏழைப் பணிப்பெண் நல்ல பக்குவகாலமடைந்திருப்பாளாயின், அந்தக் காமாதுரர்கள் தமது மனைவிமார் வீட்டிலில்லாத காலங்களில், பணிப் பெண்களைப் பிடித்திழுப்பர். ஒன்றில் இல்லாத நூதன இன்பம் வேறொன்றில் இருக்கும் என்ற மனப்பிரமையே முக்கியமாக அவர்களைத் துண்டுவதால், அவர்களுக்கு அழகைப் பற்றியாவது, குணத்தைப் பற்றியாவது அக்கறை இல்லை. இவ்வாறு சிலர் வரம்பைமீறிக் கடுங்காமங் கொண்டு தலைதடுமாறித் திரிவதற்கு முக்கியமாக அவர்களது தேகத்தின் அமிதமான திமிரே காரணமென்று சிலர் மேன்போக்காகக் கூறுகின்றனர். அது உண்மையாயின், அதிக பலசாலிகளாயிருப்பவர் அனைவரும் காமாதுரர்களென்றும், அவர்களே பர ஸ்திரீ கமனத்தில் நாட்டம் உடையவர்கள் என்றும் நாம் நினைப்பது போலாவதுமன்றி, துர்ப்பலமாக இருக்கிற மனிதர்கள் மாத்திரமே ஒரு ஸ்திரியோடு திருப்தியடைந்து நிலையில் நிற்பவர்கள் என்று எண்ணுவது போலவும் முடியும். வீராதி வீரர்களான இராவண கும்பகர்ணாதி அரக்கர்களை எதிர்த்துப் போர் புரிந்து, வெற்றியும், என்றும் அழியாப்பெரும் புகழும் பெற்ற ஒப்புயர்வற்ற அதிபராக்கிரமசாலியான இராமர் ஏகபத்ணிவிரதராயிருந்தார் என்பதிலிருந்து அவரை நாம் ஸ்திரீ விஷயத்தில் மாத்திரம் துர்ப்பலமான தேகமுடையவரென்று நினைப்பது பொருந்துமா?. அந்த உதாரணத்தை நாம் விடுத்து சாதாரணமாக உலகத்தில் ஒவ்வொரு நாளும் நமது கண்ணிற்கெதிரில் காணப்படும் குடும்பங்களை எடுத்துக் கொள்வோம். வயல்களில் வேலை செய்வதிலோ, கிணறு தோண்டுவதிலோ, கட்டைகள் வெட்டுவதிலோ, கருங்கல் உடைப்பதிலோ, இன்னும் இவை