பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

15

சாமியார்:- அதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்கள் ஒரு காரியம் செய்யும். கும்பகோணத்துக்குத் தெற்கில் ஆறு இருக்கிறதல்லவா. அந்த ஆற்றுப் பாலத்தின் கண்வாய்கள் இருக்கின்றனவே. அவைகளில், வடக்கில் இருந்து இரண்டாவது கண்வாய்க் கட்டிடத்தில் ஒரு பக்கத்தில் எனக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளை பென்சிலால் சுருக்கமாக எழுதித் தேதி போட்டு வையுங்கள். ஆனால் என்னுடைய பெயராவது, உங்களுடைய பெயராவது அங்கே இருக்கக்கூடாது. நீங்கள் கிருஷ்ணன் என்று அடியில் கையெழுத்துப் போட்டால், அதை நான் அறிந்து கொள்ளுகிறேன். தாங்கள் எழுதும் சங்கதிகள் எனக்கு மாத்திரம் அர்த்தம் ஆகவேண்டும், மற்றவருக்கு அர்த்தமே ஆகக்கூடாது, அம்மாதிரி சுருக்கமாகவும் பூடகமாகவும் இருக்க வேண்டும். நான் காலை மாலை அடிக்கடி அங்கே போய்ப் பார்த்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுகிறேன். நீங்கள் எழுதுவதை நான் படித்த பிறகு அதைக் கலைத்து விட்டு அதற்கு எதிர்ப்பக்கக் கட்டிடத்தில் தி. சா. என்ற எழுத்துக்களையும் தேதியையும் போட்டுவிட்டுப் போகிறேன். அதைக் கொண்டு, நான் அந்தச் செய்தியைப் படித்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். அல்லது, உங்களுக்கு ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமானால், தி. சா. என்பதற்கு மேல் சுருக்கமாக மறுமொழி எழுதி வைக்கிறேன். அதை நீங்கள் படித்துவிட்டு உங்களுடைய பக்கத்தில் கிருஷ்ணன் என்று வெறுங் கையெழுத்தும் தேதியும் போட்டு வையுங்கள். இப்படி நாம் அடிக்கடி ஒருவருக்கொருவர் சங்கதி சொல்லிக் கொள்ளுவோம். அதுவுமன்றி, அவசியமானால் நான் தபால் மூலமாகவோ, அல்லது, ஆள் மூலமாகவோ தங்களுக்குக் கடிதமும் அனுப்புவேன். அல்லது, சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில், நானே நேரில் தங்களுடைய ஜாகைக்கே வந்தாலும் வருவேன். இதைத் தவிர, நான் கும்பகோணத்தில் இன்ன இடத்தில் தான் இருப்பேன் என்று குறிப்பாகச் சொல்ல முடியாது.

கண்ணப்பா:- சரி; தங்களுடைய பிரியப்படியே செய்கிறேன். இன்னொரு சங்கதி. வருகிற வெள்ளிக்கிழமை அன்று பட்டணத்தில் என் தம்பிக்கு நிச்சயதார்த்தம் நடத்த உத்தேசித்