பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

மாயா விநோதப் பரதேசி

நிரப்பப்பெற்றிருந்தன. நடுமத்தியிலிருந்த சிலையின் தலையிலும், நான்கு மூலைகளிலிருந்த சிலைகளின் மார்பிலும் மகா நுட்பமான துளைகள் நிறைந்த தாமரைப் புஷ்பம் போன்ற வடிவமுள்ள விசையின் வழியாக, புகையிலும் அதிக நுட்பமான அத்தர்த் திவலைகள் அந்த அறை முழுதிலும் ஒரே மாதிரியாகப் பெய்து கொண்டிருந்தமையால், சுவர்கள், பூச்செடிகள், ஸோபாக்கள், சயனமஞ்சம் முதலிய சகலமானவைகளும் வாசனை மயமாக நிறைந்து போயிருந்தன. அதுவும் அன்றி, அன்றையதினம் மாசிலாமணி இரண்டு மூன்று வண்டிகள் காணத்தகுந்த ரோஜாப் புஷ்பங்கள், ஜாதிமல்லி கைப் புஷ்பங்கள், தாமரைப் புஷ்பங்கள் முதலியவைகளைத் தருவித்து அவற்றின் காம்புகள், நரம்புகள், முதலியவைகளைப் போக்கி, மிருதுவான இதழ்களை மாத்திரம் பிரித்தெடுத்து மெத்தையின் மீது கூடை கூடையாகக் கொட்டிப் பரப்பிவிடச் செய்திருந்தான். அவற்றின் இனிய நறுமணமும், அத்தர் பன்னீர் முதலியவற்றின் சுகந்தமும் ஒன்று கூடி மனிதரது மனத்தைப் பரவசப்படுத்தி ஆநந்தசாகரத்தில் ஆழ்த்துவனவாய் நிறைந்து ஜன்னல் திறப்பின் வழியாக வெளியிற் சென்று பல தெருக்கள் வரையில் கமகமவென்று வீசின. மஞ்சத்தின் பக்கத்தில் ஒரு விசாலமான சலவைக்கல் மேஜையின் மீது மாதுரியமான சுவை ததும்பிய பகஷண பலகாரங்களும், மிட்டாயி தினுசுகள், குழம்புப்பால், காப்பி, தண்ணீர் முதலியவை வெள்ளிப் பாத்திரங்களில் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அதற்குப் பக்கத்தில் காணப்பட்ட இன்னொரு மேஜையின் மீது புதுமை புதுமையான கனிவர்க்கங்கள் கமகமவென்ற மனத்தோடு ஏராளமாகக் குவிந்துகிடந்தன. மஞ்சத்தினருகில் வாசனைத் திரவியங்கள் கலந்த தாம்பூல சாமான்களும், தங்கப்பாளங்கள் போலவிருந்த பொறுக்கிளசு வெற்றிலையும், வெள்ளி பஸ்பமும் வாசனையும் கலந்த வெண்ணெய் போன்ற சுண்ணமும் காணப்பட்டன. இன்னம் வர்ணிப்பில் அடங்காத இவை போன்ற ஏராளமான வஸ்துக்களும், முஸ்தீபுகளும் அந்த மாளிகையில் மாலை ஆறு மணிக்கே நிறைந்து போகும்படி நமது மாசிலாமணி தனது பணி மக்களை ஏவிச் செய்ததன்றி, தானும் அன்றையதினம் மாலையில் சுத்தமாக கூஷவரம் செய்துகொண்டு, வாசனை கலந்த பன்னீரில்