பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

173

கூரையில் சிலந்தி பூச்சிகள் கட்டியுள்ள கூடாரங்களே அஸ்மானகிரி. கொசுக்கள் பறந்து வட்டமிடுவதே தோரணங்கள். மூலைக்கொன்றாய்ச் சொருகப் பெற்றிருக்கும் நாலைந்து ஊதுவத்திகளின் வாசனை அற்பமாக இருந்தாலும், எப்போதும் சுத்தமான காற்றைப் பிடித்துப்பழகிய அந்த மணமகனது மூக்கில் அந்த வாசனை நன்றாக உறைத்து அவனுக்கு உண்மையான இன்பத்தை உண்டாக்குவது நிச்சயம். ஆனால் மாசிலாமணியின் சயன அறைக்குள் மனிதர் போய் ஐந்து நிமிஷ நேரம் இருப்பார் களானால், அங்கு விபரீதமாக உண்டாகும் வாசனைப் படலம் தாக்குவதால், மூக்கின் சுரணையே உடனே அற்றுப்போவதன்றி, கொஞ்சநேரத்தில் எரிச்சல் எடுத்துக் கொள்ளும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமல்லவா? நல்ல சுத்தமான காற்றில்லாமல், முழுவாசனையையே முகர்ந்து கொண்டு கொஞ்சநேரம் இருந்தால் மனிதன் உடைய உடம்பில் சகிக்க முடியாத வேதனை உண்டாவது நிச்சயம். அந்த நிலைமையில் அவ்விடத்தில் அபாரமாகக் காணப்படும் மிட்டாயி தினுசுகளையும், பழங்களையும் பார்க்கும்போதே குமட்டலுண்டாகும். அவன் எல்லா வஸ்துக்களையும் கண்ணால் பார்ப்பதோடு திருப்தியடைய வேண்டுமேயன்றி, உண்மையில் அவன் சாப்பிடப் போவது ஒன்றுமில்லை. குடிசையில் நான்கு ஊதுவத்திகளின் வாசனையோடிருப்பவன் தனக்காக வைக்கப்பட்டிருக்கும் அதிரசம், திரட்டுப்பால், பஜ்ஜி முதலியவைகளைப் பூர்த்தியாக உண்டு களிப்பதற்கு எவ்வித இடையூறும் ஏற்படுகிறதில்லை. அவைகளைத் தவிர, இன்னொரு முக்கியமான பேதமுமிருக்கிறது. மாசிலாமணி வாசனைத் திரவியங்கள், தின்பண்டங்கள் இவைகளையெல்லாம் விடுத்து தன்னுடைய புதிய சோபனப் பெண்ணினிடம் நெருங்கிக் கொஞ்ச நேரம் இருப்பானாகில், இவ்வளவுதானா இந்த இன்பம் என்று அவன் நினைத்து உடனே வெறுப்படைந்துவிடுவது நிச்சயம். ஏனென்றால், எவ்வளவு அழகுடைய ஸ்திரீகளாக இருந்தாலும், தூரத்திலிருந்து பார்க்கும் மட்டுமே கவர்ச்சியும் வசீகரமும் இருக்கும் அன்றி, கிட்ட நெருங்கிய பிறகு, அது சாதாரணமாய்த் தோன்றுவது நிச்சயம். இந்த மாசிலாமணி மகா துன்மார்க்கனான காமாதுரன். இவன்