பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

மாயா விநோதப் பரதேசி

எடுப்பது துன்பத்தில்தான் முடியுமென்று கந்தசாமி எண்ணிக் கொண்டான். அவ்விதமான மன நிலைமையில் அவன் இருக்க மணி எழரை ஆயிற்று. சோபன அறைக்கு அவனை அழைத்துப் போவதற்காக வேலைக்காரி வந்து சேர்ந்தாள். அவன் நாடகங்களில் கதாநாயகி வேஷம் தரித்து நடித்த காலங்களில், அவனைப் பார்த்த மனிதர்கள் எல்லோரும் அவன் தத்ரூபம் பெண்போலவே இருக்கிறான் என்றும், அவன் ஆணென்று கண்டுபிடிக்க எவராலும் இயலாதென்றும் அடிக்கடி கூறி அவனை அபாரமாகப் புகழ்ந்ததைக் கேட்டு இருந்தானா தலால், அந்த வேலைக்காரியாவது, மாசிலாமணியாவது, மற்ற எவராவது தனது சூதைக் கண்டு கொள்வார்களோ என்ற அச்சமே அவனது மனதில் சிறிதும் உண்டாகவில்லை ஆதலால், அவன் அற்பமும் விகாரப்படாத முகத் தோற்றத்தோடு, ஒரு ஸ்திரீ எப்படி இயற்கையான நாணம் மடம் அச்சம் பயிர்ப்புடன் நடந்து கொள்வாளோ அவ்வாறே அவன் நடந்து கொண்டான். அதிகப் பழக்கமும் அநுபவமும் இல்லாத புதிய வேஷக்காரர்கள் தமது முகத்தோற்றத்திலிருந்து தாம் ஆண் பிள்ளை என்பதைப் பிறர் கண்டு கொள்வார்களோ என்று அஞ்சித் தமது முகத்தை மறைத்துக் கொள்ள முயல்வது இயற்கை. ஆனால், நமது கந்தசாமியோ அவ்வித பயமும் கிலேசமும் சிறிதுமின்றி நன்றாக நிமிர்ந்து வேலைக்காரியைப் பார்த்தான். அவ்வாறு அவன் பார்த்தது, "சோபன அறைக்குப் புறப்பட்டுப் போக நேரம் ஆய் விட்டதா?" என்று கேட்க அவன் விரும்புகிறானென்பதை எளிதில் காண்பித்தது. அதை உணர்ந்த வேலைக்காரி, "அம்மா! மணி எழரை ஆகிறது. நீங்கள் எழுந்துவந்து சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். அதற்குள் ஏழேமுக்கால் மணியாகிவிடும். உடனே நாம் புறப்பட்டுப் போகலாம்" என்றாள்.

உடனே கந்தசாமி, "எனக்கு இன்றையதினம் பசியே உண்டாகவில்லை. மத்தியானம் சாப்பிட்டது வயிற்றில் அப்படியே இருக்கிறது. ஆகையால், இப்போது எனக்கு ஆகாரமே தேவையில்லை" என்று தனது குரலைப் பெண்ணின் குரல்போல மாற்றிக் கொண்டு பேசினான்.

வேலைக்காரி, "சரி படுக்கையறையில் வைத்திருக்கும் பக்ஷணங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுவதற்கு வயிறு வேண்