பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

மாயா விநோதப் பரதேசி

போலிமணப்பெண்:- பட்டணத்தில் என்னைக் கண்டு தாங்கள் ஆசைப்பட்டு, என் தகப்பனாருக்குத் தெரியாமல் ஆள்களை விட்டு எடுத்து வந்திருப்பதாகவும், என் பெயர் மனோன்மணியம்மா என்றும் தாங்கள் சொல்ல அவள் தெரிந்து கொண்டதாக என்னிடம் வேலைக்காரி சொன்னாளே! தங்களுக்கு என் பெயர் தெரியாதென்றால், அந்த விவரத்தை அவள் எப்படிச் சொன்னாள்?

மாசிலாமணி:- (புன்னகை செய்து) நான் சொல்வதற்கும் வேலைக்காரி சொன்னதற்கும் வித்தியாசமிருக்கிறது என்பது உண்மைதான். அப்படி வித்தியாசம் ஏற்பட்டதை நீதான் சரியான படி திருத்த வேண்டும். வேலைக்காரி அப்போது தவறாகச் சொன்ன காலத்திலேயே நீ அது தப்பென்று திருத்தி இருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல், நீ அதுவே உண்மையென்று ஒப்புக் கொள்பவள் போலப் பேசாமலிருந்து விட்டாய். இப்போது என்னிடத்திலாவது நீ உண்மையைச் சொல்ல வேண்டுமல்லவா?

போலி மணப்பெண்:- (சிறிது தயங்கி) அப்படியானால் வேலைக்காரி சொன்னது பொய்யென்பது இப்போது தெரிந்து போய்விட்டது போலிருக்கிறது. வேலைக்காரி என்னிடம் சொன்னபோதே அவளிடம் நான் உண்மையைச் சொல்ல எத்தனித்தேன். ஆனால், அதைத் தாங்கள் நிஜமென்று நம்பமாட்டீர்களென்ற பயம் என் மனசில் உண்டானதாகையால் நான் சும்மா இருந்து விட்டேன். ஏனென்றால், சென்னப் பட்டணத்திலிருக்கும் கலெக்டருடைய மகளை எடுத்து வரும்படி நீங்கள் ஆள்களை அனுப்பி இவ்வளவு தூரம் பிரயாசைப் பட்டிருக்கையில், தங்கள் மனம் ஏமாற்றமடையக் கூடாதென்பது என்னுடைய எண்ணம். ஏனென்றால், அந்த ஏமாற்றத்தினால், தாங்கள் ஒருவேளை கடுமையான கோபங்கொண்டு, அதை அநாதையான என்மேல் காட்டி என்னை உபத்திரவிக்கப் போகிறீர்களே என்ற எண்ணத்தினால் கிலிகொண்டு, நடப்பது நடக்கட்டுமென்று நினைத்து, சும்மா இருந்தேன். தாங்கள், எந்தப் பெண்ணின்மேல் ஆசை கொண்டீர்களோ அவள் வேறே ஒருத்தி யென்பதையும், நான் வேறொருத்தி என்பதையும் தாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது தாங்கள் பேசுவதிலிருந்து