பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

மாயா விநோதப் பரதேசி

நினைத்து நான் அந்த ஏமாற்றத்தை அவ்வளவாகப் பொருட் படுத்தாமல் மறந்து, அவள்மேல் நான் வைத்திருந்த ஆசையையெல்லாம் உன்மேல் திருப்பினேன். உன்னுடைய யோக்கியதாம்சங்களைக் கண்டபிறகு, உன் விஷயத்தில் என் மனத்தில் அபாரமான வாஞ்சை சுரந்து போய் விட்டதாகையால், உன்னால் ஏற்பட்ட இந்த இரண்டாவது தவறைப் பற்றி உன்மேல் கடுமைகாட்ட என் மனம் சம்மதிக்கவில்லை. பழம் நழுவிப் பாலில் விழுந்ததென்று சொல்லும் பழமொழியை நான் நினைத்து ஒருவிதத்தில் சந்தோஷமடைந்து, உன்னையே என்னுடைய பெண்ஜாதியாக ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்து உன் பொருட்டு இத்தனை அலங்காரங்களையும் ஏற்பாடுகளையும் செய்திருக் கிறேன். இப்போதாவது உண்மை உனக்குத் தெரிந்ததா? ஆகையால், இனியாவது நீ உன்னுடைய பெயரையும், நீ யார் என்ற விவரங்களையும் சொல்லலாமல்லவா?

போலி மணப்பெண்:- தாங்கள் சொல்வது நிஜமான விஷயம். சென்னப்பட்டணத்தில் இராத்திரி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நான் கண்விழித்துப் பார்க்கையில், முன்பின் தெரியாத ஒரு புதிய இடத்தில் இருக்கிறேன் என்பது தெரியவே, அறியாத பெண்ணான என் மனசில் எவ்வளவு பெருத்த கிலி ஏற்படும் என்பதை நான் சொல்லவேண்டுவதே இல்லை. அதோடு, இவ்வளவு பயங்கரமும் துணிகரமுமான காரியத்தைச் செய்து என்னை அபகரித்துக் கொண்டு வந்திருக்கும் மனிதர் எப்படிப்பட்ட துஷ்டராயும் கொடியராயும் இருப்பாரோ என்ற திகில் என் மனசில் உண்டாகாதா? அப்படிப்பட்ட மனிதரிடத்திலிருந்து நாம் எப்படித் தப்பித்துக்கொண்டு போகப் போகிறோமென்ற மலைப்பும் கவலையும் என் மனசில் உண்டாவது சகஜமல்லவா? கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல, இன்ன ஊர், இப்படிப்பட்ட மனிதர் என்ற விவரம் எதையும் அறிந்து கொள்ளக்கூடாத நிலைமையில் நான் இருந்தேன். இது எந்த ஊர், தாங்கள் யார் என்ற விவரங்களையும் எனக்குத் தெரிவிக்கக்கூடாதென்று தாங்கள் கண்டித்திருந்ததாகவும் வேலைக்காரி என்னிடம் சொனனாள். அதைக் கேட்கவே, என்னுடைய திகலும், கவலையும், மனக்கலக்கமும் ஆயிரமடங்கு அதிகமாய்ப் பெருகிவிட்டன.