பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

மாயா விநோதப் பரதேசி

கலியாணம் செய்து கொண்டிருந்து, அந்த மனைவிகள் இறந்து போய்விட்டதால், இதை நாலாவது, அல்லது ஐந்தாவது கலியாணமாக நடத்துகிறீர்களோ என்னவோ தெரியவில்லை.

மாசிலாமணி:- (வெட்கித் தலைகுனிந்து பிறகு துணிபடைந்து நிமிர்ந்து) பெண்ணே! உன்னுடைய தோற்றத்தைப் பார்த்தால் நீ பரம ஸாதுவாகக் காணப்படுகிறாய்! உன் முகம் நல்ல உத்தம லக்ஷணங்களைக் காட்டுகிறது! உன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நிரம்பவும் கடுமையான வார்த்தைகளாக இருக்கின்றனவே. அதுவுமன்றி, நான் சொல்லும் வார்த்தைகளை நன்றாய்க் கவனித்து முக்கியமானவைகளை எடுத்து வக்கீல் போலக் குறுக்கு விசாரணை செய்யும் கூர்மையான குதர்க்கபுத்தி உனக்கு இருக்கிறதேயன்றி, வார்த்தைகளைச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி எப்படி அர்த்தம் செய்து கொள்ள வேண்டுமென்ற பெருந்தன்மையான விவேகம் உன்னிடத்தில் இல்லைபோலத் தோன்றுகிறது. என் புத்தி பல ஸ்திரீகளிடத்திலும் சபலித்தலைகிறதென்றால், நான் இதற்கு முன் பல ஸ்திரீகளிடத்தில், சிநேகமாயிருந்தேன் என்று அர்த்தம் செய்கிறதா? நான் ஆண்பிள்ளை அல்லவா? நான் லக்ஷம் லக்ஷமாகப் பொருள் படைத்த சீமானல்லவா? எத்தனையோ பெரிய பெரிய தனிகர்கள் தம் தம் பெண்களை எனக்குக் கட்டிக் கொடுப்பதாகப் பிரஸ்தாபம் செய்வது சகஜம்தானே. அந்தப் பெண்களையெல்லாம் நான் பார்த்திருக்கக்கூடாதா? அவர்கள் உபயோக மற்றவர்களாக இருந்தும், என் மனம் அவர்கள்மேல் சென்று சபலித்திருக்கக் கூடாதா?

போலி மணப்பெண்:- அப்படி சபலித்திருந்தால், தங்களுக்கு இந்நேரம் கலியாணம் நடந்திருக்காதா? அவர்கள்தான் பெண் கொடுக்க இணங்கி வந்ததாகச் சொல்லுகிறீர்களே. உங்களுக்கும் மனமிருந்தால், கலியாணம் முடிய ஆட்சேபனை என்ன? ஒரு தனிகர் தம்முடைய பெண்ணைத் தங்களுக்குக் கொடுப்பதாகச் சொல்லி முன்வர, அந்தப் பெண்ணின் மேல் தங்களுக்கும் ஆசை ஏற்பட்டுப் போயிருக்க, அதை விட்டு தாங்கள் தங்களுடைய ஜென்ம விரோதியான ஒருவருடைய பெண்ணின்மேல் ஆசை வைத்து அவளைப் பலாத்காரமாய் அபகரித்துவரக் காரணமே இல்லையே.