பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

207

தகப்பனாருடைய ஆசார ஒழுக்கங்கள் புத்திப்போக்கு முதலிய வற்றிலிருந்தே நான் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். அதைத் தவிர, தாங்கள் எண்ணுவது போல, நான் பட்டணம் போக்கிரி என்ற வகுப்பில் சேர்ந்தவளேயல்ல. நான் இப்போது தங்களிடம் சொன்ன வார்த்தைகளிலிருந்து அப்படிப் பட்ட குணம் என்னிடம் இருப்பதாகத் தாங்கள் நினைத்தது என்னுடைய பொல்லாத வேளையின் கூறு என்றே நினைக்கிறேன். இப்போது தாங்கள் பேசியதிலிருந்து எனக்கு இன்னொரு சந்தேகம் உண்டாகிறது. நாம் இருக்கும் இந்த வீடும் பட்டணத்திலேயே இருக்கிறதென்றும், தாங்களும் பட்டணத்து மனிதர் என்றும் நான் இதுவரையில் எண்ணிக் கொண்டிருந்தேன், இப்போது யோசித்துப் பார்த்தால், இது பட்டணத்திற்கு வெளியிலுள்ள ஏதோ ஒர் ஊர்போல இருக்கிறது. தாங்கள் மனோன்மணியம்மாளைப் பார்த்து ஆசைப்பட்டு அவளை எடுத்துவர ஆளை அனுப்பியதாகச் சொன்னீர்கள். ஆனால், நான் வந்து உங்களுக்குப் பக்கத்தில் மணையில் உட்கார்ந்த காலத்தில், நான் மனோன்மணியம்மாள் அன்றென்பதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. இப்போது தாங்கள் சொன்னதிலிருந்து, தாங்கள் வெளியூரிலுள்ளவர்கள் என்பதும் தெரிவதால், அதையும் எண்ணிப் பார்க்க, என் மனம் பலவிதத்தில் சந்தேகம் கொள்கிறது.

மாசிலாமணி:- (முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த வியப்பும் பிரமிப்பும் அடைந்து) என்ன ஆச்சரியம் இது! ஸ்திரீகள் இப்படியும் பேசுவதுண்டா! அதிலும், சோபன அறைக்கு முதன் முதலாக வந்து, தன்னுடைய புருஷனோடு பேசுவதற்கும், புருஷனைப் பார்ப்பதற்கும் வெட்கி நாணிக்கோணி மூலையில் ஒளிந்து, பின் புறத்தைத் திருப்பிக்கொண்டு நிற்கும் ஓர் அறியாத பெண் சொல்லக்கூடிய வார்த்தையா இது? உன்னைத் தகப்பனார் பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கவே இல்லை என்கிறாய்? ஸ்திரீகள் தங்களுக்கு இயற்கையாக உள்ள புத்திசாலித்தனத்தையும் தம்முடைய பர்த்தாவிற்கெதிரில் அதிகமாக பகிரங்கப்படுத்திக் கொள்ளாமல் அடக்கிக்கொள்ள வேண்டுமென்கிறாய்! ஆனால் நீ செய்யும் யூகங்களும் கேட்கும் கேள்விகளும் என் மனசில் பெருத்த பிரமிப்பை உண்டாக்குகின்றனவே! நீ மணையில்