பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

மாயா விநோதப் பரதேசி

உட்கார்ந்த காலத்தில், நீ மனோன்மணியம்மாள் அன்றென்று நான் அடையாளங்கண்டுகொள்ளவில்லை என்பதிலிருந்தும், நான் வெளியூரில் உள்ளவன் என்பதிலிருந்தும், உன் மனம் பலவித சந்தேகம் கொள்ளுகிறதென்றாயே. என்ன சந்தேகம் அது?

போலி மணப்பெண்:- தாங்கள் இதற்குமுன் அந்த மனோன்மணியம்மாளைப் பார்த்ததே இல்லையென்றும், அவளைக் கண்டு ஆசைப்பட்டு அபகரித்து வரச் செய்தீர்களென்பது சரியல்ல வென்றும் என் மனம் சந்தேகப்படுகிறது. இப்படி நான் நினைப்பதற்கு முக்கியமான இன்னொரு காரணமும் இருக்கிறது; அவள் எப்போதும் தன்னுடைய பங்களாவிற்குள்ளேயே இருக்கிறாள். தன்னுடைய பெட்டி வண்டிக்குள் உட்கார்ந்து பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டு நேராக அதே வண்டியில் பங்களாவிற்கு வந்து விடுகிறாள். பட்டணத்திலுள்ளவர்களுக்குக் கூட அவளைப் பார்ப்பது துர்லபமான காரியமென்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருக்க, வெளியூரிலுள்ளவர்களான தாங்கள் அவளைப் பார்த்திருக்கவே சந்தர்ப்பம் இருந்திருக்காது. அப்படித் தாங்கள் அவளைப் பார்த்திருந்தால், இப்போது சுத்தமாக அவளுடைய அடையாளம் தெரியாமல் போயிருக்கவே இருக்காது.

மாசிலாமணி:- அப்படியே வைத்துக்கொள். அதனால் என்ன? நான் அவளை எடுத்துவர வேண்டுமென்று ஆள்களை அனுப்பவில்லை என்றும், உன்னை எடுத்து வருவதற்காகவே ஆள்களை அனுப்பினேனென்றும் நீ நினைக்கிறாயா? உன்னுடைய கருத்து இன்னதெனத் தெரியவில்லையே?

போலி மணப்பெண்:- நான் அன்றைய தினம் மத்தியானம் தானே தற்செயலாக அங்கே வந்தேன். என்னை எடுத்துவரத் தாங்கள் ஆள்களை அனுப்பியதாக நான் எண்ணுவேனா? அப்படி நான் எண்ணவில்லை. தங்களுக்கும் அந்தப் பட்டாபிராம பிள்ளைக்கும் ஏதோ பகைமை இருப்பதாகச் சொன்னீர்களே. அந்தப் பகைமையே முக்கியமான காரணமென்று நான் நினைக்கிறேன்; வேறொன்றுமில்லை. மனோன்மணியம்மாளின் மேல் நீங்கள் ஆசைப்பட்டுத்தான் அவளைக் கொண்டுவர வேண்டுமென்பதில்லையல்லவா? பகைவருடைய மகளை பலவந்தமாக அபகரித்து