பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

209

வந்து மானபங்கப்படுத்தினால், அது அந்தப் பகைவரைத் தண்டித்தது போன்ற ஒரு திருப்தியை உண்டாக்குமல்லவா? அதுவுமன்றி, எனக்கு இன்னொரு சந்தேகமும் தோன்றுகிறது. அந்தப் பெண்ணுக்கு வருகிற வெள்ளிக்கிழமையன்று நிச்சயதார்த்தம் நடக்கப்போகிறது என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒருவேளை தங்களுக்கும் அந்த மாப்பிள்ளை வீட்டாருக்கும் பகைமை இருக்கலாம். அவர்களுடைய எண்ணம் நிறைவேறாமல் செய்வதோடு, இரண்டு பகைவரையும் அவமானத்திற்கும், விசனத்திற்கும் ஆளாக்க உத்தேசித்து தாங்கள் அவளை எடுத்து வரச் செய்திருக்கலாமென்றும் நான் நினைக்கிறேன்.

மாசிலாமணி:- {மிகுந்த பிரமிப்பும் கலக்கமுமடைந்து) என்ன விநோதம் இது? நீ என் மனதிற்குள் நுழைந்து பார்த்தவள் போல எல்லா விஷயங்களையும் சொல்லுகிறாயே! அப்படியே தான் இருக்கட்டுமே! அதற்கு நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லுகிறாய்? நீ சொல்வது உனக்கு இன்னம் அதிக அநுகூலமான விஷயந்தானே. நான் மனோன்மணியம்மாளின் மேல் உண்மையில் ஆசைப்பட்டு, அவள் வராமையால் ஏமாற்றம் அடைந்து, அந்த நிலைமையில் உன்னைக் கட்டிக் கொள்வது நல்லதா? அல்லது, நான் வேறொருத்தியின் மேல் வைத்த ஆசையை மாற்ற வேண்டிய துன்பமில்லாமல், புதிதாக உன் மேலேயே ஆசை கொள்வது நல்லதா? நீயே யோசித்துப் பார்.

போலி மணப்பெண்:- புதிதாக என்மேல் ஆசை கொள்வது தான் சிலாக்கியமானது. அவள் மேல் ஆசை வைத்ததாகவும், நான் வந்து அதைக் கெடுத்து, அதை என்மேல் திருப்பிக் கொண்டதாகவும் இல்லாத சங்கதியை உண்டாக்கிச் சொன்னீர்களே. அது நல்லதா?

மாசிலாமணி:- (வெட்கமும் ஆயாசமும் அடைந்து அசட்டு நகை நகைத்து) ஏதேது, நீ மகா கண்டிப்புக்காரியாக இருக்கிறாயே! உன்னிடம் நான் எவ்விதமான பணிவை எதிர்பார்க்க முடியும் என்பது தெரியவில்லையே! சாதாரணமாக மனிதர் பொய் சொல்வது கூடாது தான். இருந்தாலும் உலகத்தில் எப்போதும் உண்மையையே பேசிய அரிச்சந்திரன் ஒருவன் தானே இருந்தான். மற்ற ஜனங்களில் பெரும்பாலோரும் கபடிகளாகவும்