பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

மாயா விநோதப் பரதேசி

போலக் குறுக்கு விசாரணை செய்து புருஷரோடு குதர்க்கவாதம் செய்கிறவர்களாய் இருந்தால், புருஷருக்கு அவர்களிடம் மன இளக்கமும், வாஞ்சையும் கொஞ்சமும் உண்டாக ஏதுவில்லை. உன்னுடைய அழகையும் முகவிலாசத்தையும் கண்டு என் மனம் உன்மேல் பிரமாதமாக லயித்துப் போயிருந்தது. அந்த நிலைமையில் நான் இங்கே வந்து உன்னைப் பார்த்தேன். நீ நாணிக் கோணி மூலையில் ஒதுங்கி நின்ற நிலைமை என்னுடைய உயிரையும் மனசையும் முன்னிலும் நூறு மடங்கு அதிக உரமாகக் கொள்ளை கொண்டது. அந்த நிலைமையில் நீ குழந்தை போல நடந்து என்னிடம் வந்து விளையாடி இருந்தால், அந்தச் சுகத்தை நான் தேவேந்திர போகமாய் மதித்திருப்பேன். அது அர்த்தமற்ற சிற்றின்பமாய் இருந்தாலும், அது தேவாமிருதம் போல இனித்திருக்கும். அதை விட்டு, நீ நல்ல கருத்தோடும் அதிக விவேகத்தோடும் பேசி வாக்குவாதம் செய்ததைக் கேட்கக் கேட்க, இப்போது என் மன நிலைமை எப்படி மாறிவிட்டது தெரியுமா? கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று இப்படி பச்சை மிளகாய் போல நடந்து கொள்ளும் இந்த மனுஷியிடம் நாம் வெட்கத்தை விட்டு எப்படி விளையாடி சந்தோஷமாக இருக்கிறது என்ற பயம் என் மனசில் உண்டாகி விட்டது. உன்னைக் கூப்பிட்டு என் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ளவும் உன்னைத் தொடவும் என் மனம் கூசுகிறது. நீ பகுத்தறிவற்ற ஒரு குழந்தையைப் போல நடந்து என் மனதை சந்தோஷப்படுத்தி இருந்தால், நீ என்னுடைய உயிரைக் கேட்பதானாலும், நான் கொடுக்கக்கூடிய மனநிலைமை எனக்கு ஏற்பட்டிருக்கும். இப்போது என்ன எண்ணம் உண்டாகிறது தெரியுமா? உன் வாயாடித்தனத்தை அடக்க வேண்டும் என்றும், நீ இனி எப்போது அசதி மறதியாய்த் தப்பாகப் பேசுவாய் என்று பார்த்திருந்து, அதை வைத்துக் கொண்டு உன்னை நன்றாகத் தண்டிக்க வேண்டும் என்றும் என் மனம் நினைக்கிறது. உன்னுடைய அபாரமான புத்திக் கூர்மையினால் உனக்கு ஏற்பட்ட அனுகூலத்தைப் பார்த்துக் கொண்டாயா? ஆயிரம் பொய் சொல்லி ஒரு கலியாணத்தை முடிக்க வேண்டும் என்று நான் சொன்னதற்கு, நான் கலியாணம் ஆனபிறகல்லவா பொய் சொன்னேன் என்று நீ