பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

மாயா விநோதப் பரதேசி

மணிக்கே இங்கே வந்துவிட்டேன். நான் சொல்லும் குறிகளில் இருந்து, என் மனம் தங்கள் விஷயத்தில் எப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறதென்பது தங்களுக்கு எளிதில் தெரிந்து போகும். அதற்கு மேல் விவரமாகச் சொல்ல, எனக்கு வெட்கமாய் இருக்கிறது. ஆகையால், இனி என்னைத் தாங்கள் வெறுத்து விலக்கினாலும், நான் இந்த வீட்டை விட்டு உயிரோடு வெளியில் போகமாட்டேன். என்னுடைய பிராணனையாவது நான் இந்த வீட்டிலேயே விடுவேன் அன்றி, உயிரோடு தங்களை விட்டு நான் பிரிந்து போக மாட்டேன். இதைத் தாங்கள் உறுதியாக நம்பலாம். இனி நான் தங்களுக்குத் தெரியாமல் எந்த விஷயத்தையும் என் மனசில் மறைத்து வைக்கப் போகிறதில்லை. நானும், என் அம்மான் மகனும் என்ன கருத்தோடு பட்டாபிராம் பிள்ளையின் வீட்டிற்குப் போனோம் என்ற விவரத்தை நான் உள்ளபடி சொல்லி விடுகிறேன். அதைத் தாங்கள் கேளுங்கள். பிறகு, அது பொய் என்று நானே பிரமாணிக்கம் செய்து மறுத்தால்கூட, தாங்கள் என்னுடைய பிந்திய பிரமாணத்தை நம்பவே மாட்டீர்கள். நான் எங்கள் கருத்தை உள்ளபடியே தெரிவித்திருக்கிறேன் என்பது தானாகவே தங்கள் மனசில் பட்டுப்போகும். நான் இனி எந்த வரலாற்றையும் தங்களிடம் மறைக்க வேண்டும் என்ற பயமே இல்லை. ஏனென்றால், தாங்களும் அவர்கள் விஷயத்தில் எங்களைப் போலவே நடந்து கொள்ளக் கருதியிருப்பதால், நம் இருவருடைய மனப்பான்மையும் ஒத்துப் போய்விட்டது. நாம் ஒருவருக்கொருவர் அனுசரணையான மனிதர் ஆகிவிட்டோம். தங்களுக்கும் சென்னப் பட்டணத்தில் உள்ள பட்டாபிராம பிள்ளைக்கும் கடுமையான பகைமை உண்டென்று தாங்களே ஒப்புக் கொண்டீர்கள் ஆனால், வேலாயுதம் பிள்ளை வீட்டாருக்கும், தங்களுக்கும் பகைமை இருக்கலாம் என்று நான் சொன்னதைத் தாங்கள் ஒப்புக் கொண்டீர்கள். ஆனாலும், அது உண்மையோ, அல்லது, வாக்குவாதத்திற்காக ஒப்புக் கொள்ளப்பட்டதோ என்பது தெரியவில்லை. தங்களுக்கும் அவர்களுக்கும் பகைமையில்லை என்றே வைத்துக் கொண்டாலும், தாங்கள் மனோன்மணியம்மாளை எடுத்துவர உத்தேசித்ததில் இருந்து தங்களுக்கும் அவர்களுக்கும் சிநேகம்