பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

217

இல்லை என்பது நன்றாக விளங்குகிறது. அது ஒன்றே எனக்குப் போதுமானது. நான் இனி துணிந்து விஷயத்தை வெளியிடலாம். எங்களுக்கும், மன்னார்குடி வேலாயுதம் பிள்ளைக்கும் ஜென்ம விரோதம். நாங்கள் மன்னார்குடி கோபால சமுத்திரத்தில் இருப்பவர்கள். நாங்களும் அவர்களைப்போல பெருத்த மிராசுதாரர்கள்தான். ஆனால், அவர்களுக்கும் எங்களுக்கும் எப்படி பகைமை ஏற்பட்டது என்பதைச் சொல்லுகிறேன், அவ்விடத்தில் வேறொரு பெரிய மிராசுதார் இருந்தார். அவருக்கு வருஷத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு வருமானம் உண்டு. ஆனால், அவருக்குச் சந்ததியே உண்டாகவில்லை. அவருக்கு ஒரு சம்சாரம் உயிரோடு இருக்கும் போதே புத்திர சந்தானத்தை அபேட்சித்து என் தமக்கையை அவர் இரண்டாவது தாரமாகக் கட்டிக் கொண்டார். ஆனால், என் தமக்கைக்கும் சந்ததி உண்டாகவில்லை. என் தமக்கையின் புருஷருக்கு அதிக வயது ஆய்விட்டதாகையால், அதற்கு மேல் அவருக்குப் புத்திரசந்தானம் உண்டாகாதென்ற நிச்சயம் ஏற்பட்டுப் போனதாகையால், அவர் அந்த வேலாயுதம் பிள்ளையின் இளைய குமாரனான கந்தசாமி என்பவனை சுவீகார புத்திரனாய் எடுத்துக் கொள்ள உத்தேசித்து, அவனை அழைத்து வந்து பிள்ளைபோல வைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவனை வளர்த்துக் கொண்டதாக தஸ்தாவேஜி முதலிய ஆதாரம் எதையும் ஏற்படுத்தவில்லை. கொஞ்ச காலத்திற்கெல்லாம் என் அக்காள் புருஷனும், அவருடைய மூத்த சம்சாரமும் திடீரென்று இறந்து போய் விட்டார்கள். என் தமக்கை எங்களுடைய வீட்டிற்கு வந்துவிட்டாள். என் தமக்கை புருஷருடைய ஐசுவரியம் முழுதும் தங்களைச் சேரவேண்டும் என்று வேலாயுதம் பிள்ளை என் தமக்கை பேரில் வியாஜ்ஜியம் தொடர்ந்தார். கும்பகோணத்தில் இருந்த பிரபல வக்கீலான சட்டை நாத பிள்ளை அவர்களை வக்கீலாக வைத்து என் தமக்கை எதிர்கட்சியாடி அவருக்கு ஒரு லட்ச ரூபாயும், அவர் மூலமாக சப் ஜட்ஜிக்கு ஒரு லட்ச ரூபாயும் கொடுத்தாள். அந்த நியாயஸ்தலத்தில் வழக்கு என் தமக்கைக்கு அனுகூலமாய் முடிந்தது. அப்போது திகம்பரசாமியார் என்ற பாவி வந்து இல்லாத பொல்லாத உபத்திரவங்களை எல்லாம் கொண்டு வந்து வைத்து எங்களுக்கு உபகாரம் செய்த புண்ணிய