பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

மாயா விநோதப் பரதேசி

மூர்த்திகளான சட்டை நாத பிள்ளை அவர்களையும் சப் ஜட்ஜியையும் தண்டனைக்கு ஆளாக்கினதோடு, மேல் நியாயஸ்தலத்தில் சுவீகார வியாஜ்ஜியம் என் தமக்கைக்கு விரோதமாய் முடியும்படி செய்து விட்டான். அதன் பிறகு நாங்கள் என் தமக்கையிடம் இருந்த குபேர சம்பத்திற்குச் சமதையான ஐசுவரியத்தை எல்லாம் அந்தக் கந்தசாமிக்குக் கொட்டிக் கொடுக்க நேர்ந்தது. அவன் எங்கள் வீட்டில் வந்திருந்து கொஞ்ச காலம் எங்கள் சோற்றைத் தின்ற பாவத்திற்காக நாங்கள் சகலமான சம்பத்தையும் இழக்க நேர்ந்தது. என் தமக்கையின் வியாஜ்ஜியத்தை நடத்தியதில் என் தகப்பனாருக்கு தம்முடைய சொந்த சொத்தில் பல லட்சம் நஷ்டமாயிற்று. அந்த வியாஜ்ஜியம் எங்களுக்குத் தோற்றுப் போனதோடு எங்கள் கையே முறிந்து போய்விட்டது. அந்தத் தீராத விசனத்தில் என் தகப்பனாரும், என் தமக்கையும் நோயாய் விழுந்து இன்னும் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்கள். அது முதல் எங்கள் குடும்பத்திற்கும் அந்த வேலாயுதம் பிள்ளையின் குடும்பத்திற்கும் ஜென்மப் பழியாக இருந்து வருகிறது. எங்களால் ஆனவரையில் அவர்களுக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. அந்தக் கந்தசாமியைக் கொன்று போட்டு, அவன் எங்களிடம் அக்கிரமமாக அபகரித்த சொத்தை அவன் அனுபவிக்க முடியாமல் செய்துவிட வேண்டும் என்பது தன் தகப்பனாருடைய எண்ணம். இந்த நிலைமையில், அவனுக்கிருக்கும் சொத்து போதாதென்று, புத்திர சந்தானமற்ற பட்டாபிராம பிள்ளை தம்முடைய பெண்ணை அவனுக்குக் கொடுக்கப் போகிறார் என்பது தெரிந்தது. அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. அதற்காக என் தகப்பனார் என்னையும், என் அம்மான் மகனையும் அனுப்பினார். நாங்கள் அன்னியர்கள் என்றால், அவர்கள் எங்களைக் கிட்டச் சேர்க்கவும் மாட்டார்கள். ஆகையால், நாங்கள் வேலாயுதம் பிள்ளையின் மைத்துனியும் மைத்துனி புருஷனும் என்று சொல்லிக் கொண்டு போனோம். போய் அந்தப் பெண்ணின் இங்கிலீஷ் நாகரிகத்தைப் பார்த்து, வேலாயுதம் பிள்ளையின் வீட்டார் சுத்த கர்னாடக மனிதர் ஆகையால், அவர்கள் அவளைக் கேவலம் அடிமை போல நடத்துவார்கள்