பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

221

வேனே அன்றி, பிரதிகூலமாக உபயோகப்படுத்தவே மாட்டேன் என்பது நிச்சயம். நம்முடைய மனசின் வாத்சல்யத்தையும், நம்முடைய அன்னியோன்னிய பாவத்தையும் இனி கடவுள்கூட விலக்க முடியாது என்பது நிச்சயம். இப்போது நம்மிருவருடைய சந்தேகங்களும் தீர்ந்து போய்விட்டன. ஆனால், இன்னொரு விஷயம் நான் தங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன். பட்டாபிராம பிள்ளையின் வீட்டில் அன்றைய தினம் நடந்த வரலாறு முழுதும் சமாசாரப் பத்திரிகையில் வந்திருப்பதாகச் சொன்னீர்களே, என் அம்மான் குமாரர் அந்தப் பங்களாவில் இருந்தாரே, அவரை அவர்கள் என்ன செய்தார்கள் என்ற விபரம் ஏதாவது தெரிகிறதா?

மாசிலாமணி:- ஆம்; வந்திருக்கிறது. ஆனால், அந்த விவரத்தைக் கேட்பாயானால், உனக்கு நிரம்பவும் விசனம் உண்டாகும். என்னுடைய ஆள்களோ, அல்லது, கலெக்டருடைய ஆள்களோ அவரை நன்றாக அடித்துப் போட்டுவிட்டார்களாம். அவர் நிரம்பவும் அபாயகரமான நிலைமையில் ஆஸ்பத்திரியில் கிடக்கிறாராம். அவருக்குப் பிரக்ஞையே இல்லையாம். அவர் பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறாராம். அவரிடம் உண்மையைக் கிரகிக்க வேண்டும் என்று போலீசார், அவர் எப்போது சுய உணர்வை அடைவார் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

போலி மணப்பெண்:- (உண்மையில் துடிதுடித்துப் பதறிப் போய்) ஆ! அப்படியா! ஐயோ! என் அம்மான் சேய்க்கு அப்படிப் பட்ட அபாயமா நேரிட்டது. ஐயோ தெய்வமே! என் விஷயத்தில் பெருத்த நன்மை செய்த நீ அவர் விஷயத்தில் இப்படித்தானா தாங்க முடியாத பெருத்த சதி செய்ய வேண்டும். அவரும் தப்பித்துக் கொண்டு போகும்படியான ஒரு மார்க்கத்தை நீ காட்டக் கூடாதா? ஐயோ! என்ன செய்வேன்! என் தேகம் பதறுகிறதே! எனக்கு மயக்கம் வருகிறதே!

மாசிலாமணி:- (நிரம்பவும் உருக்கமாக) கண்ணே! விசனப் படாதே! அவர் எப்படியும் பிழைத்துக் கொள்வார். அவர் நல்ல நிலைமைக்கு வரட்டும். நான் என்னுடைய ஆள்களை விட்டு,