பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

மாயா விநோதப் பரதேசி

ஆஸ்பத்திரியில் இருந்தபடி அவரைத் தூக்கிக் கொண்டு வந்துவிடச் செய்கிறேன். அதைப்பற்றி நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதில்லை. இன்னமும் நீ ஏன் தூரத்தில் நிற்கிறாய்? இப்படி வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொள். உனக்கு நான் ஒரு பெருத்த சந்தோஷ சங்கதி சொல்லுகிறேன். நம்முடைய பகைவனான வேலாயுதம் பிள்ளையையும் அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரையும் அங்கஹீனப்படுத்திவிட்டு வரும்படி என்னுடைய ஆள்களை மறுபடி இன்று நான் பட்டணத்திற்கு அனுப்பி இருக்கிறேன். கந்தசாமிக்கும் மனோன்மணியம்மாளுக்கும் செய்ய ஏற்பாடாய் இருக்கும் கலியாணத்தை ஊர்ஜிதப்படுத்த, வருகிற வெள்ளிக்கிழமை நிச்சயதாம்பூலம் மாற்றப் போகிறார்களாம். நாளைய தினம் மாலையில் புறப்பட்டு மன்னார்குடியார் பட்டணம் போகிறார்களாம். வெள்ளிக்கிழமை இராத்திரி அவர்கள் எல்லோரும் படுத்திருக்கையில், நம்முடைய ஆள்கள் உள்ளே புகுந்து, அவர்களை எல்லாம் மூளிப்படுத்த போகிறார்கள், வடிவாம்பாளுடைய மூக்கை அறுக்கவும், கண்ணப்பாவின் கண்களைத் தோண்டிவிடவும், வேலாயுதம் பிள்ளையின் வலது காதையும், அவர்களுடைய பெண்ஜாதியின் இடது காதையும் அறுக்கவும், கந்தசாமியின் முகத்தில் அக்கினித் திராவகத்தைக் கொட்டி முகத்தை விகாரப்படுத்தவும் ஏற்பாடு ஆகியிருக்கிறது. அந்தக் காரியம் நிறைவேறிப் போகுமானால், அதுவே அவர்களுடைய ஜென்மத்திற்கும் போதுமானது. அதன் பிறகு நாம் அவர்களை அவ்வளவோடு விட்டுவிடலாம். உங்களுக்கும் மனத்திருப்தி ஏற்படும் என்று நினைக்கிறேன் - என்றான்.

அந்த வரலாற்றைக் கேட்ட போலி மணப் பெண்ணின் தேகம் கிடுகிடென்று நடுங்கியது. மனம் துடித்தது. உயிர் தள்ளாடியது. தங்களுக்குத் தெரியாமல் தங்கள் குடும்பத்தாருக்கு மகா பயங்கரமான தீங்கிழைக்க மாசிலாமணி அப்படிப்பட்ட விபரீதமான சதியாலோசனையைச் செய்திருக்கிறானே என்ற எண்ணமும் திகிலும் தோன்றி, மின்சார சக்தி போல அவனது தேகம் கிடு கிடென்று இரண்டொரு தரம் ஆடும்படி செய்தன. ஆனால், தனது