பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

223

விபரீத நிலைமையை மாசிலாமணி கண்டு, தன் மீது சந்தேகங்கொண்டுவிடப் போகிறானோ என்ற நினைவினால், கந்தசாமி நிரம்பவும் பாடுபட்டுத் தனது விகாரத் தோற்றத்தை மறைத்துக் கொண்டு, முன்போலவே பேசத் தொடங்கி, "ஆஹா! தாங்கள் பிரமாதமான ஏற்பாடுகளை எல்லாம் செய்திருக்கிறீர்கள்! தாங்கள் மரத்தை அடி வேரோடு தள்ள ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்! நாங்கள் ஒரு கிளைக்கு ஓர் அற்பத் தீங்கு செய்ய எத்தனித்தோம். இந்தச் சங்கதி எங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால், நாங்கள் பட்டணம் போய் இந்த அநாவசியமான தொந்தரவில் மாட்டிக் கொண்டிருக்கவே மாட்டோம். நாங்கள் முதலில் உங்களோடு கலந்து யோசனை செய்யாமல் போய்விட்டோம். அப்படிப் போனதில், என் அம்மான் குமாரர் பெருத்த அபாயத்திற்கு இலக்காய்ப் பிழைப்பாரோ மாட்டாரோ என்ற நிலைமையை அடைய நேரிட்டதானாலும், வேறு விதத்தில் நாங்கள் தலைகீழாய் நின்று தவஞ் செய்தாலும் கிடைக்காததான தங்களுடைய சம்பந்தம், எங்களுக்கு ஏற்பட்டது கடவுளின் கருணை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும், என் அம்மான் குமாரருடைய தேக நிலைமையைக் கேட்ட முதல் என் தலை சுற்றுகிறது; மயக்கம் வருகிறது; உடம்பு கிடுகிடுவென்று ஆடுகிறது தங்களுடைய சம்பந்தம் ஏற்பட்டதைப்பற்றியும், எதிராளிகள் அங்கஹீனப்படப் போவதைப்பற்றியும் என் மனசில் ஒரு பக்கத்தில் ஆனந்தம் ஏற்பட்டது ஆனாலும், என் அம்மான் குமாரரைப் பற்றிய துக்ககரமான செய்தி ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலந்தது போல என்னைச் சகிக்க முடியாத சஞ்சலத்தில் ஆழ்த்துகிறது. ஆகையால், தாங்கள் இந்த ஏழையின் மேல் கருணைபாவித்து இந்த முகூர்த்தத்தை நாளைய தினம் வரையில் ஒத்திவைக்க வேண்டுமாய் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். தங்கள் மேல் நான் எவ்வளவு அபாரமான பிரேமையும் வாஞ்சையும் வைத்திருக்கிறேன் என்பதை நான் சரியானபடி காட்டி, அற்பமும் விசனமே கலவாத பேரின்ப சுகத்தைத் தாங்கள் அனுபவிக்கும்படி செய்ய வேண்டும் என்பது என்னுடைய மனப்பூர்வமான அவா. என் இப்போதைய மன நிலைமையும் தேகநிலைமையும் அதற்கு அனுகுணமாக இல்லை.