பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே, துரைசாமி ஐயங்கார்

225

நேரம் உட்கார்ந்திருந்த மாசிலாமணி, மறுநாள் எப்படியும் தான் அந்த நடக்கும் சுவர்க்க லோகத்தைத் தனது மார்பில் சேர்த்தணைத்துத் தனதாக்கலாம் என்று எண்ணமிட்டவனாய் இரண்டொரு நிமிஷ நேரம் இருந்த பின் அவ்விடத்தை விட்டு எழுந்து போய், தான் அதற்கு முன் வழக்கமாகப் படுத்துக் கொள்ளும் சயனக்கிரகத்தை அடைந்து படுத்து அந்தப் பெண்ணின் ஒப்புயர்வற்ற அழகையும், அபார புத்தி விசேஷத்தையும், குணாதிசயங்களையும் பற்றிக் கனவு கண்டவனாய்த் துயின்று அந்த இரவைப் போக்கினான்.

★ ★ ★

பொழுது விடிந்தது; அவன் படுத்திருந்த அறைக்குள் வேலைக்காரி தடதடவென்று தலைவிரி கோலமாக ஓடிவந்து, "சாமி! சாமி!" என்று பணிவாகவும் பதைப்பாகவும் கூப்பிட்டாள். அந்தக் குரல் ஓசையைக் கேட்டு விழித்துக் கொண்ட மாசிலாமணி திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து, "என்ன சங்கதி? என்ன விசேஷம்? என்ன நடந்தது?" என்று ஆவலோடு வினவ, வேலைக்காரி, "எஜமானே! நாம் பட்டணத்திலிருந்து கொண்டுவந்த பெண்ணைக் காணோமே! அவளை நீங்கள் எங்கேயாவது அனுப்பி விட்டீர்களா? என்ன" என்றாள்.

அதைக் கேட்ட மாசிலாமணி துள்ளிக் குதித்து அளவற்ற பிரமிப்பும் கலக்கமும் அடைந்து, "என்ன! என்ன! பட்டணத்தில் இருந்து கொண்டு வந்த பெண் காணப்படவில்லையா! இந்த இரண்டு தினமும் அவள் இருந்த அறையில் போய்ப் படுத்துக் கொள்வதாய்ச் சொல்லிவிட்டுப் போனாளே! அங்கே போய்ப் பார்த்தாயா?" என்றான்.

வேலைக்காரி, "நான் முதலில் சோபன அறைக்குப் போய்ப் பார்த்தேன். அவள் அங்கே இல்லை. பிறகு நான் அதற்கு முன் அவள் இருந்த அறையில் போய்ப் பார்த்தேன். அங்கேயும் அவள் இல்லை; எனக்குப் பெருத்த கவலை உண்டாகிவிட்டது. நீங்கள் ஒருவேளை அவளை இங்கே அழைத்து வந்து படுக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்களோ என்று நான் கொஞ்ச நேரத்திற்கு முன் இங்கே வந்து பார்த்தேன். இங்கேயும் அவள் காணப்படவில்லை.