பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

மாயா விநோதப் பரதேசி

என் திகில் அதிகரித்து விட்டது. நானும் மற்ற வேலைக்காரரும் சேர்ந்து வீடு முழுதும் ஓரிடம் விடாமல் போய்த் தேடிப் பார்த்தோம். ஒரு வேளை கிணற்றில் விழுந்திருப்பாளோ என்று வேலைக்காரன் கிணற்றிற்குள் இறங்கித் தேடிப் பார்த்தான். அவள் காணப்படவில்லை. அதன் பிறகு ஒரு வேலைக்காரன் சந்தேகமாக ஒரு வார்த்தை சொன்னான். அதாவது, அவன் இரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு விழித்துக் கொண்டு எழுந்து வெளியில் ஒன்றுக்குப் போனானாம். அப்போது வாசற்கதவு உள்பக்கத்தில் தாழ்ப்பாள் போடப்படாமல் சும்மா சாத்தி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டானாம். இராத்திரி பத்து மணிக்குத் தான் படுக்கப் போன போது கதவை உள்பக்கத்தில் தாழ்ப்பாள் போடத் தான் மறந்து போயிருக்கலாம் என்று அவன் சந்தேகித்து மறுபடி தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு உள்ளே வந்து படுத்துக் கொண்டானாம். அதை நினைக்க, பெண் நடு இரவிற்கு முன் எழுந்து எவருக்கும் தெரியாதபடி கதவைத் திறந்து கொண்டு வெளியில் போயிருப்பாளோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. தங்களை எழுப்பி இதைச் சொல்ல வேண்டும் என்று ஓடி வந்தேன்" என்றாள்.

அதைக் கேட்ட மாசிலாமணியின் தேகம் பறந்தது. அவனது மனம் தாங்க ஒண்ணாத பிரமிப்பும் கலவரமும் அடைந்தது. வேலைக்காரி சொன்னது மெய்யோ பொய்யோ என்ற பிரமையினால், அவன் ஸ்தம்பித்துப் போய் ஐந்து நிமிஷ நேரம் மௌனமாக இருந்தபின் எழுந்து, தனது உடைகளைச் சரியாக அணிந்து, வீடு முழுதும் சென்று ஓரிடம் விடாமல் தேடிப் பார்த்தான். பெண் தன்னை வஞ்சித்து ஓடிப் போய்விட்டாள் என்ற எண்ணம் அவனது மனதில் உதிக்க ஆரம்பித்தது. அவள் மன்னார்குடிப் பெண்ணாக இருந்தால் அப்படி ஓடமாட்டாள் ஆதலால், அவள் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்ட வரலாறு பொய்யான வரலாறு என்ற நிச்சயமும் ஏற்பட்டது. ஆனாலும், அவன் உடனே ஓர் ஆளை வண்டியில் வைத்து மன்னார்குடிக்கு அனுப்ப, அந்த ஆள் அன்றையதினம் பகலில் திரும்பி வந்து கந்தசாமியின் சுவீகாரத் தாயார்களில் இளைய தாயாருக்கு தங்கை,