பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

227

அல்லது, வேறு சகோதர சகோதரிகளே இல்லை என்று தான் கேள்வியுற்றதாகத் தெரிவித்தான்.

அதைக் கேட்கவே, மாசிலாமணியின் திகிலும் கலவரமும் ஆயிரம் மடங்கு பெருகி வதைக்கத் தொடங்கின. அந்தப் பெண்ணின் சொல்லை உண்மை என்று நம்பி தங்களது ரகசியத்தை எல்லாம் சொல்லிவிட்டதை நினைக்க நினைக்க மாசிலாமணியின் மனம் இன்னதென்று விவரிக்க முடியாத பரம வேதனையை அடைந்து தத்தளித்தது. அந்தப் பெண் அப்போதே மன்னார்குடிக்குப் போய் வேலாயுதம் பிள்ளை வீட்டாரை எச்சரித்து விடுவாளோ என்ற பயமும் கவலையும் எழுந்தெழுந்து வதைக்கலாயின. ஆனாலும், அந்தப் பெண் வேறு எந்த விதத்திலாவது வேலாயுதம் பிள்ளை வீட்டாரிடத்திலோ பட்டாபிராம பிள்ளை வீட்டாரிடத்திலோ பகைமை உடையவளாய் இருக்க வேண்டும் என்ற நினைவு உண்டானது ஆகையால், அவள் அநேகமாய் அவர்களை எச்சரிக்கமாட்டாள் என்ற எண்ணமே மேலாடி நின்றது. அவ்வாறு அவன் பலவகைப்பட்ட எண்ணங்களாலும் சந்தேகங்களாலும் மாறிமாறி வதைக்கப்பட்டும் தைரியம் அடைந்தும் அன்றைய பொழுதைப் போக்கினான். வேலாயுதம் பிள்ளை வீட்டார் சென்னப் பட்டணத்திற்குப் போய்விட்டார்கள் என்ற செய்தியும் அவனுக்கு எட்டியது. ஆகவே அவன் வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் தமது ஆட்கள் வெற்றி அடைவார்களோ மாட்டார்களோ என்று எண்ணி ஓயாக் கவலையில் ஆழ்ந்து, நரகவேதனை அனுபவிப்பவனது நிலைமையை அடைந்து, வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களையும் கடத்தினான். வெள்ளிக்கிழமை இரவில், அங்கஹீனம் நடந்திருந்தால், அது சனிக்கிழமைப் பத்திரிகைகளில் வெளியாகி ஞாயிற்றுக்கிழமை கும்பகோணத்திற்கு வரும் ஆதலால், அவன் ஞாயிற்றுகிழமைத் தபாலை ஆவலோடு எதிர்பார்த்து, அன்றைய தினம் வந்த பத்திரிகையைப் பிரித்துப் பார்க்க, அதில் காணப்பட்ட விபரீதச் செய்தி அவனது கண்ணில் பட்டது. மகா கோரமான சம்பவம் என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டிருந்த விவரத்தை அவன் படிக்கவே, அவன் அடைந்த ஆனந்தமும், குதூகலமும், அளவிட முடியாதவையாய்