பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

21

எல்லாம் தடிகொண்டு அடித்துப் பழுக்க வைப்பதைவிடத் தானே பழுக்கும்படி செய்வதே, நம்முடைய மனசுக்கு உகந்த காரியம் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. ஆகையால் தயை செய்து நீங்கள் பேசாமல் படுத்துக் கொள்ளுங்கள்; பொழுது விடிந்த பிறகு நாம் வேலைக்காரியை அனுப்புவோம்" என்றான்.

அதைக் கேட்ட மாசிலாமணி சிறிது நேரம் சிந்தனை செய்த பிறகு, "ஆம், சேர்வைக்காரரே! நீர் சொல்வது நல்ல யோசனை யாகத்தான் படுகிறது. ஆனாலும், நீர் அந்தப் பெண்ணின் அழகைப் பற்றிச் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட முதல் என் மனசில் என்னவோ ஒருவிதமான விகாரம் ஏற்பட்டு நிரம்பவும் சஞ்சலப்படுத்துகிறதன்றி, அவளை உடனே பார்த்து அவளோடு ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் என்ற ஆவல் என்னை வதைக்கிறது. இருந்தாலும், பாதகமில்லை. நீர் சொல்லுகிறபடி நான் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுகிறேன். நீர் வேலைக்காரியின் மூலமாகவே அவளைச் சரிபடுத்தும். ஆனால் நீர் சொன்ன யுக்தியில் ஒருவிதமான கேள்விக்கு இடம் இருக்கிறது. அவளை நான் பட்டணத்தில் கண்டு அவள் மேல் ஆசை கொண்டு, அவளைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு இங்கே கொண்டு வந்திருப்பதாக நம்முடைய வேலைக்காரி சொல்வதை அவள் கேட்டு, 'அப்படியானால், நேரில் என் தகப்பனாரிடம் வந்து ஏன் கலியாணப் பிரஸ்தாபம் செய்யக்கூடாது, இப்படி பலவந்தமாக என்னைத் தூக்கி வரவேண்டிய காரணம் என்ன, இவர் தன்னுடைய பெயர் முதலிய விவரங்களை எல்லாம் மறைக்க வேண்டிய காரணம் என்ன என்று கேள்வி கேட்பாளானால், அதற்கு வேலைக்காரி என்ன சொல்லுகிறது? அதை எல்லாம் நீர் நன்றாக யோசனை செய்து அவளுடைய மனம் திருப்தியடையத் தக்கபடி சமாதானம் சொல்லும்படி வேலைக்காரிக்கு யுக்தி சொல்லிக் கொடுக்க வேண்டும்" என்றான்.

இடும்பன் சேர்வைகாரன், "அதுதானா ஒரு பெரிய காரியம்; அதற்குத் தக்க சமாதானம் சொல்லும்படி நான் செய்கிறேன். அதைப்பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்படவே தேவை